ஆன்மிகம்

இறைவன் தரும் நற்கூலி

Published On 2019-05-30 04:08 GMT   |   Update On 2019-05-30 04:08 GMT
இறைவனின் நற்கூலியைப்பெற நாமும் இறைவன் மீது நம்பிகை கொண்டு, அவன் வகுத்தவழியில் வாழ்ந்து, தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்ற முன் வருவோம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுக்கிடையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் வந்து ‘ஈமான் என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும் மரணத்திற்குப்பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக்கூறினார்கள்.

அடுத்து இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டதற்கு‘ இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீங்கள் இணையாகக் கருதாத நிலையில் அவனை வணங்குவதும், தொழுகையை நிலை நிறுத்தி வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை வழங்கி வருவதும், ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்ற கூறினார்கள்.

அடுத்து இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்ட போது (இஹ்ஸான் என்பது ) அல்லாஹ்வை (நேரில்) காண்பதை போன்று நீர் வணங்குவதாகும். நீர்  அவனைப்பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மை பார்த்து கொண்டே இருக்கிறான் என்றார்கள்.

அடுத்து உலகம் அழியும் நாள் எப்போது? என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதைப்பற்றி கேட்கப்பட்டவர் (நான்) அதைப்பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களை பற்றி உமக்கு சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப்பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்: மேலும் கருப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்த மக்கள் உயர்ந்த் கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக்கொள்ளல்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிமாட்டார் என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

நிச்சயமாக (உலக முடிவு) காலத்தை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் (மட்டும்) தான் இருக்கிறது. (திருக்குர்ஆன்31:34)

பின்னர் அம்மனிதர் திரும்பிச்சென்றார். அவரை  அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரை காணவில்லை.

அப்போது இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு  அவர்களின் மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வந்திருக்கிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர்(ரலி)

இதுகுறித்து திருக்குர்ஆன்(2:277) வசனம் குறிப்பிடுகையில், ‘ பார் ஈமான் கொண்டு நற்கருமங்களை செய்து தொழுகையை நியமமாகக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது: அவர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ என்று தெரிவிக்கிறது.

இறைவனின் நற்கூலியைப்பெற நாமும் இறைவன் மீது நம்பிகை கொண்டு, அவன் வகுத்தவழியில் வாழ்ந்து, தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமைகளை நிறைவேற்ற முன் வருவோம்.

வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
Tags:    

Similar News