ஆன்மிகம்

மறுமை நாளில் நபிகளின் பரிந்துரை

Published On 2019-05-28 05:02 GMT   |   Update On 2019-05-28 05:02 GMT
ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
ஒருமுறை நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘நாயகமே மறுமையில் உங்களின் பரிந்துரையின் மூலம் நற்பாக்கியம் பெறுபவர் யார்?’ எனக்கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள், ‘உமக்கு இருக்கும் பேராசையினால் இந்தக்கேள்வியை கேட்கிறீர்கள். உம்மைத்தவிர வேறு யாரும் இந்தக் கேள்வியை கேட்கமாட்டார்கள் என்பதை நான் அறிவேன்’ என்று கூறினார்கள். பின்னர் தொடர்ந்து என் பரிந்துரையின் மூலம் மறுமையில் நற்பாக்கியம் பெறுபவர்கள் யார் என்றால், எவர் உள்ளத்தூய்மையுடன் மனதாலும், உள்ளத்தாலும், இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவாரோ அவர் தான் என்றார்கள்.

ஒரு மனிதன் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்றால் அவனிடம் கீழ்க்கண்ட 8 விஷயங்கள் இருக்க வேண்டும். இதில் 4 உள்ளம் சம்பந்தப்பட்டது. மீதி 4 உடல் சந்பந்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

1. தெரிந்தோ, தெரியாமலோ பாவம் செய்து விட்டால், அதன்பிறகு இனிமேல் அந்த பாவத்தை செய்யமாட்டேன் உள்ளத்தால் உறுதி கொள்ள வேண்டும்.

2. பாவத்தை விட்டு நீங்க வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி செய்த பின்னர் அதை மனதால் செயல்படுத்தவும் முன்வர வேண்டும்.

3. இதையும் மீறி பாவம் செய்தால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் மனதில் ஏற்பட வேண்டும்.

4. யார் மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்கிறார்களோ அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இறைவன் கூறிஇருக்கிறான். அதன்படி பாவமன்னிப்பு கேட்கும் எனது பாவங்களும் இறைவனால் மன்னிக்கப்படும் என்று மனதில் உறுதியாக எண்ணம் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இந்த நான்கும் உள்ளம் சார்ந்தது. இனி உடல் சார்ந்த 4 விஷயங்கள்:

5. ஏதேனும் பாவம் செய்து விட்டால், உடனே இறைவனிடம் பாவமன்னிப்பு பெற வேண்டும் என்று மனதில் முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உடலை சுத்தம் செய்து பள்ளிவாசல் வரவேண்டும். அங்கு 4 ரக்அத்கள் தொழ வேண்டும்.

6. தொழுகை முடிந்த பின்னர் 70 முறை ‘அஸ்தஃபிருல்லாஹ் ரப்பீ மின்குல்லி தன்பின்வ கதீஅதின் வஅதூபு இலைஹி’ என்று கூற வேண்டும். (இதன் பொருள் : ‘ எனது எல்லாப்பாவங்களில் இருந்தும் இறைவனிடம் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். நான் இறைவனின் பக்கமே மீண்டு விட்டேன்’ என்பதாகும்). அடுத்து ‘ சுப்ஹான ரப்பியல் அளீம் வபிஹம் திஹி’ என்று 100 முறை கூற வேண்டும்.

7. தன்னால் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

8. பாவ மன்னிப்பு வேண்டி ஒருநாள் நோன்பு இருக்க வேண்டும்.

ஒருவன் இந்த எட்டு நிலைகளையும் சரியாக கடைப்பிடித்துவிட்டால் அவனது பாவமன்னிப்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது குறித்து திருக்குர்ஆன் (11:114,115) இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்’.

எனவே இந்த புனிதமிகு ரமலானில் நல்லறங்களை அதிகம் செய்து இறைவனிடம் பாவ மன்னிப்பை பெற்று சுவனபதியில் இடம் பெற நான் அனைவரும் முயற்சி செய்வோம், ஆமீன்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.

Tags:    

Similar News