ஆன்மிகம்

நேர்வழிக்காட்டும் திருக்குர்ஆன்

Published On 2019-05-27 06:43 GMT   |   Update On 2019-05-27 06:43 GMT
(மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)
புனிதமான இந்த ரமலான் காலங்களில் மிக அதிகமாக திருக்குர்ஆன் ஓத வேண்டும். ஏன் என்றால் மறுமை நாளில் ஒரு மனிதருக்கு சிபாரிசு செய்யக்கூடிய அந்தஸ்து கொண்டவை நோன்பும், திருக்குர்ஆனும். இவை இரண்டும் மறுமைநாளில் அல்லாஹ்விடம் ‘இந்த மனிதன் நோன்பு வைத்து திருக்குர்ஆன் ஓதியதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம். இதற்காக இவனுக்கு நீ சொர்க்கத்தை அளிப்பாயாக’ எனறு இறைவனிடம் சிபாரிசு செய்யும்.

சிறப்புகள் மிகுந்த திருக்குர்ஆன் ஒரு ரமலான் மாதத்தில் தான் இறக்கப்பட்டது. அந்த திருக்குர்ஆன் மீது நம்பிக்கை கொண்டு அதை ஓதி வருபவர்களுக்கு கிடைக்கும் பரிசு சொர்க்கம் ஆகும். இதை புறக்கணித்தவர்கள் நஷ்டம் அடைந்தவர் ஆவார். இது குறித்த வசனங்கள் வருமாறு:

ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் -(என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 2:185)

‘எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். இவர்கள் இதன் மீது (இந்தக்குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமைந்தவர்களாவர்’. (திருக்குர்ஆன் 2:212)

‘எவர்கள் தங்கள் இறைவனின் (திருக்குர்ஆன் என்னும்) தெளிவான அறிவைப்பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (“ஈஸா”வுக்கு) அருளப்பட்டது (இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் அருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக் கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சுவனபதிதான்.) இந்த (மூ)வகுப்பாரில் எவர்கள் இதனை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். (திருக்குர்ஆன் 11:17)

(மனிதர்களே) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனை கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்)அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204)

திருக்குர்ஆனை தொடர்ந்து ஓதி வருபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று  இறைவன் வாக்களித்துள்ளான். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த சொர்க்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

இம்மையில் எப்போதும் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த மனிதன் மறுமையில் சொர்க்கம் செல்வான். அப்போது  அந்த மனிதனிடம், இறைவனின் நல்லடியாரே, நீர் திருக்குர்ஆனை நிதானமாக ஓதியபடி சொர்க்கத்திற்கு செல். நீ ஓதும் திருக்குர்ஆன் வாசகங்களை எந்த இடத்தில் முடிக்கிறாயோ அவ்வளவு தூரும் உள்ள இடமும் உனக்குத்தான். இதுவே சொர்க்கத்தில் நீ தங்குமிடமாகும்.

இந்த ரமலான் காலத்தில் அதிகமாக திருக்குர்ஆர்ஓதுவோம். சொர்க்கவாதியாக இறைவனின் அருளைப்பெறுவோம், ஆமீன்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை. 
Tags:    

Similar News