ஆன்மிகம்

ஹஜ்: சர்வதேச ஆன்மிக மாநாடு

Published On 2018-05-31 04:54 GMT   |   Update On 2018-05-31 04:54 GMT
இஸ்லாம் விதியாக்கியுள்ள அடிப்படை வழிபாடுகளில் ஹஜ் இறுதியானது ஆகும். உடல்நலமும், வாகன வசதியும், பொருள் வசதியும் உள்ளோர் மீதே இது கடமையாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் விதியாக்கியுள்ள அடிப்படை வழிபாடுகளில் ஹஜ் இறுதியானது ஆகும். உடல்நலமும், வாகன வசதியும், பொருள் வசதியும் உள்ளோர் மீதே இது கடமையாக்கப்பட்டுள்ளது.

இறைவனை தரிசிக்க மக்காவிற்கு தான் செல்ல வேண்டுமா? இறைவனை எங்கிருந்தும் தொழலாமே என்பது அர்த்தமுள்ள கேள்வி. ஹஜ் கடமை பல நோக்கங்களை கொண்டது. மற்ற வழிபாடுகளை போலவே ஹஜ்ஜின் முக்கிய நோக்கமும் இறையச்சம், இறை உணர்வு பெறுதல்(தக்வா)ஆகும்.

நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணை சாதனங்களை கொண்டு செல்லுங்கள். வழித்துணை சாதனங்களில் மிக மேலானவை இறையச்சம் தான் என்கிறது திருக்குர்ஆன் (2:197).

ஹஜ்ஜின் போது பிராணிகளை பலியிடுகின்றனர். இது குறித்து குர்ஆன் சுறுகையில் பிராணிகளின் இறைச்சியும் இரத்தமும் இறைவனை சென்று சேர்வதில்லை. உங்களின் இறையச்சமே இறைவனை சென்று சேருகின்றது. என்று கூறுகின்றது.

ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்கும் ஒரு வழிமுறையே ஹஜ். ஏக இறைவனுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயத்திற்கு வரும் இறைநம்பிக்கையாளர்கள் அதனை கண்டு பரவசமடைகின்றனர். ஹஜ்ஜின் போது அதிகமாக தொழுகின்றர், பிரார்த்தனை புரிகின்றனர். பாவமன்னிப்பு கோருகின்றனர். இவை இறை உணர்வை வலுப்படுத்துகிறது. இது தவிர ஹஜ்ஜின் போது அவர்களிடத்தில் பல கட்டுப்பாடுகளும் உள்ளன. ஹஜ்ஜின் போது இச்சைகளை தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்று குர்ஆன் பணிக்கிறது(2:197)

இறை இல்லத்தில் தரிசிக்க வந்துள்ளவர் மானக்கேடான செயல்கள், இச்சைகளை தூண்டக்கூடிய பேச்சுக்களிலிருந்து விலகி இருக்கிறார்கள் எனில் அவர் தம் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் தூய்மையான குழந்தையை போல் அவர் தம் வீட்டுக்கு திரும்புகிறார் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஹஜ்ஜில் செய்யும் அவரது கிரியைகள் ஏக இறைப்பிரசாரத்திற்காக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை)அவர்களும், அவரது குடும்பத்தினரும் செய்த தியாகங்களை நினைவு கூர்வதாகவே உள்ளன. இது மக்கத்து மண்ணில் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவது தோழர்களும் உன்னத தியாகங்களை செய்தனர். மக்காவில் ஒவ்வொரு அங்குலமும் இதற்கு சான்று பகரும்.

ஹஜ்ஜின் போது மக்காவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இனம், மொழி, நாடு, நிறம் என்ற எல்லைகளை கடந்து உலகக்குடிமகன்களாக ஒரே உடையில் ஒரே முழக்கத்துடன் (தல்பியா) ஒன்று கூடுகின்றனர். மனிதகுலத்திற்கு இஸ்லாம் வழங்கிய சமத்துவக் கோட்பாடு உள்ளூர் பள்ளிவாசலில் தொடங்கி ஹஜ் பயணம் வரை செல்கிறது. எனவே ஹஜ் என்பது வெறும் பயணமும் அல்ல. சடங்கும் அல்ல. அது ஒரு சர்வதேச ஆன்மிக மாநாடாக சமத்துவ மாநாடாக திகழ்கின்றது.

டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, சென்னை.
Tags:    

Similar News