ஆன்மிகம்

நோன்பின் மாண்புகள்: கஞ்சத் தனத்தை கைவிடுக

Published On 2018-05-28 07:20 GMT   |   Update On 2018-05-28 07:20 GMT
அறக்கொடைகள் வழங்குவதை ஊக்குவிக்கும் இஸ்லாம் கஞ்சத்தனத்தை கடுமையாக சாடுகின்றது.
அறக்கொடைகள் வழங்குவதை ஊக்குவிக்கும் இஸ்லாம் கஞ்சத்தனத்தை கடுமையாக சாடுகின்றது.

மனிதன் பல காரணங்களுக்காக கஞ்சத்தனம் புரிகின்றான். வறுமை வந்துவிடுமோ என்ற அச்சம், மேலும் மேலும் பொருளைச் சேகரிக்க வேண்டும் என்ற பொருளாசை உலகின் மீது கொண்ட மோகம், வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற கவலை, சமூக அக்கறையின்மை, எனது உழைப்பை மற்றவர்களுக்கு நான் ஏன் தர வேண்டும் என்ற சுயநலம்  இப்படிப் பல காரணங்களுக்காக மனிதன் கஞ்சத்தனம் புரிகின்றான்.

மனிதனின் இந்தக் கஞ்சத்தனத்தை போக்க இறைவனும், இறைத்தூதரும் பல அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர்.

“அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும்.”(3:180)

“அவன் பொருளைச் சேகரிக்கின்றான். மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று. அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் (நரகத்தில்) அவன் வீசியெறியப்படுவான்.”(104:2&4)
மேற்கண்ட இறைவசனங்கள், பிறருக்கு கொடுக்காமல் சேகரித்து வைத்திருக்கும் செல்வம் அவனுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கிறது.

கஞ்சத்தனமும், பேராசையும் ஒரு இறைநம்பிக்கையாளரிடம் ஒன்றாய் இருக்காது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: நஸாயீ)
“கஞ்சத்தனத்திலிருந்து விலகி இருப்பவர்களே வெற்றியாளர்கள்” என்ற இறைவசனம் (64:16) கஞ்சத்தனத்திலிருந்து விலகி இருக்கும் மனிதனை அது இழப்பிற்கு இட்டுச் செல்லாது, மாறாக வெற்றிக்கே இட்டுச் செல்லும் என்பதை உணர்த்துகிறது.

தான் சம்பாதிக்கின்ற அனைத்தையும் இவ்வுலகிலேயே மனிதன் அனுபவிக்க முடியாது. இறப்பிற்கு பின் கொண்டு செல்லவும் முடியாது. தனது வாரிசுகளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு பிறருக்கு வழங்கலாம். எனவே மனிதர்கள் குறுகிய எண்ணத்திலிருந்து விலகி, தாராள சிந்தனை உடையவர்களாக மாறும் போது இவ்வுலகின் நிலை மாறும். வறுமை ஒழியும். வளம் பெருகும். கஞ்சத்தனத்தை கைவிடுங்கள். பகுத்துண்டு பல்லுயிர் ஓங்கச் செய்யுங்கள்.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
Tags:    

Similar News