ஆன்மிகம்

ரமலான் நோன்பு - பாவமன்னிப்பு

Published On 2018-05-23 06:11 GMT   |   Update On 2018-05-23 06:11 GMT
ரமலான் பாவமன்னிப்புக்குரிய மாதமாகும். பாவமன்னிப்பு எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கோரலாம். ஆனால் சில குறிப்பிட்ட தினங்களில், நேரங்களில் பாவமன்னிப்பு கேட்க அதிகம் வலியுறுத்தப்படுகிறது.
ரமலான் பாவமன்னிப்புக்குரிய மாதமாகும். பாவமன்னிப்பு எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கோரலாம். ஆனால் சில குறிப்பிட்ட தினங்களில், நேரங்களில் பாவமன்னிப்பு கேட்க அதிகம் வலியுறுத்தப்படுகிறது. “ரமலானில் பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்”.

பாவமன்னிப்பு பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடுகளை அறிவது அவசியம். முதலில் எது பாவம் என்பதை அறிய வேண்டும். “ஆதத்தின் சந்ததிகள் (அதாவது மனிதர்கள்) தவறிழைக்கக்கூடியவர்களே! என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

தவறிழைப்பது மனித இயல்பு. அதே வேளையில் தவறுகளை உணர்ந்து, திருந்தி வாழும் இயல்பும், வலிமையும் மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. நன்மை தீமை பற்றிய தெளிவான வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இறைவன் கண்காணிக்கின்றான் என்ற எச்சரிக்கையும் அவனுக்கு விடப்பட்டுள்ளது.

எனவே தவறுகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருந்தும் தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால் அதுவே பாவமாகும். பாவமென்பது வேண்டுமென்றே செய்வது. மீண்டும் மீண்டும் செய்வது, தவிர்த்திருக்க வாய்ப்புகள் இருந்தும் செய்வது ஆகியவற்றை குறிக்கும்.

பாவங்கள் இரண்டு வகைப்படும்.

1) இறைவனுக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்கள்: இறைவனை மறுத்தல், இணை வைத்தல், இறைக் கட்டளைகளை மீறுதல், இறைவனுக்கு நன்றி செலுத்த மறுத்தல் என்பன இதில் அடங்கும்.

2) மனிதர்களுக்கு எதிராக செய்யப்படும் பாவங்கள்: கரத்தாலும், நாவாலும் பிறருக்கு தீங்கிழைத்தல், லஞ்சம், வரதட்சணை, மோசடி, வன்முறைகள் போன்றவை இதில் அடங்கும்.

இறைவனுக்கு எதிராக செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கோர வேண்டும். மனிதர்களுக்கு எதிராக செய்த பாவங்களுக்கு பாதிக்கப்பட்ட மனிதர்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும். உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

“அக்கிரமம் செய்தவர், அதனால் பாதிப்புக்கு உள்ளானவருக்கு உரிய இழப்பீட்டை செலுத்தாதவரை (பறித்த உரிமைகளை திருப்பித் தராதவரை) இறைவன் அவர்களை தண்டிக்காது விடமாட்டான்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நம்மை அறியாது நாம் செய்த சிறு பாவங்கள், நோன்பு, தொழுகை போன்ற வழிபாடுகள் மூலம் மன்னிக்கப்படுகின்றன. பெரும்பாவங் களைப் பொறுத்தவரையில், அவற்றுக்கு பாவமன்னிப்பு கோரும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
Tags:    

Similar News