ஆன்மிகம்

தோஷங்களை நீக்கும் புலிபாய்ச்சி தீர்த்தம்

Published On 2018-08-01 06:19 GMT   |   Update On 2018-08-01 06:19 GMT
திருப்பட்டூரில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருப்பட்டூரில் உள்ளது பல நூற்றாண்டுகளைக் கடந்த காசி விஸ்வநாதர் ஆலயம். பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.

ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.

மனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம். 
Tags:    

Similar News