ஆன்மிகம்
இயேசு

இயேசுவுக்காக கை விடுவோமா?

Published On 2020-10-07 08:38 GMT   |   Update On 2020-10-07 08:38 GMT
நமக்காக தம் ரத்தத்தையே சிந்திய கிறிஸ்து இயேசுவுக்காக கை விடுவோமா? நம் நேரத்தை தகுதியாக ஜெபத்திலும் வேத வாசிப்பதிலும், ஆண்டவர் இயேசுவுக்காக செலவழிப்போமா? இதுவே கர்த்தருக்கேற்ற உபவாசம்.
என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சை செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க மாட்டீர்கள் என்று வேதாகமத்தில் யோவான் 15-ம் அதிகாரம் 4-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அன்பானவர்களே!

இந்த மேற்கண்ட வசனத்தை இயேசு கிறிஸ்து நாம் கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ்வதற்காக சொல்கிறார். கனி என்றால் என்ன? நம் வாழ்க்கையில் கிரியையே கனி அதாவது தன்னைப்போல் பிறரிடமும் அன்பாயிருப்பது, எவ்வேளையிலும், எல்லா நாளிலும் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பது, யாவரோடும் எல்லா நேரத்திலும் சமாதானமாயிருப்பது, சோதனை வேளையில் நீடிய பொறுமையோடு கர்த்தர் ஜெயம் தருவார் என ஜெபத்தில் காத்திருப்பது, ஏழைகளுக்கு தயவாய் இரக்கம் செய்வது, நற்குணமாய் கர்த்தருக்கு பயந்து நடப்பது, இன்பத்தில் துன்பம் நேர்ந்தாலும் கிறிஸ்துவுக்குள் விசுவாசமாயிருப்பது, கோபப்படும் மக்களிடையே சாந்தமாய் ஒளிர்வது, மாம்சத்திலும், ஆவியிலும் இச்சை அடக்கத்துடன் வாழ்வது, இவையே கனி கொடுக்கும் ஜீவியம். நாம் இப்படிபட்ட கனிகொடுக்கும் ஜீவியம் வாழ இயேசுவுக்குள் நிலைத்திருக்க வேண்டும்.

இந்த தவக்காலங்களில் உலக பிரகாரமாக எதை எதையோ இயேசுவுக்காக கைவிடுகிறோம் ஆனால் கனி கொடுக்கும் ஜீவியம் வாழ பெருமை, பொறாமை, ஆகாத சம்பாஷனை, மாயமான விசுவாசம், கோபம், எரிச்சல், சண்டைகள், பிறரை துன்பப்படுத்தும் வஞ்சக பேச்சு, மற்றவரை ஏளனமாய் கனவீனம் செய்தல், கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை இவை அனைத்தும் நமக்காக தம் ரத்தத்தையே சிந்திய கிறிஸ்து இயேசுவுக்காக கை விடுவோமா? நம் நேரத்தை தகுதியாக ஜெபத்திலும் வேத வாசிப்பதிலும், ஆண்டவர் இயேசுவுக்காக செலவழிப்போமா? இதுவே கர்த்தருக்கேற்ற உபவாசம். இதை இந்த தவக்காலங்களில் கடைபிடித்து இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருப்போம்.

சகோதரி. ரூத்பிமோராஜ், கே.ஜி. கார்டன், திருப்பூர்.
Tags:    

Similar News