ஆன்மிகம்
இயேசு

இயேசுவின் அன்பின் கரத்திற்குள் ஒப்புக்கொடுப்போம்

Published On 2020-09-30 09:19 GMT   |   Update On 2020-09-30 09:19 GMT
கிறிஸ்துவை திருமுன்னிலைப்படுத்துதல் என்பதை ஒப்புக்கொடுத்தல், படைத்தல், அர்ப்பணித்தல் என மொழியாக்கம் செய்யலாம். இது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
கிறிஸ்துவை திருமுன்னிலைப்படுத்துதல் என்பதை ஒப்புக்கொடுத்தல், படைத்தல், அர்ப்பணித்தல் என மொழியாக்கம் செய்யலாம். இது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

இன்று நாம் நமக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1 மாதம், அல்லது அதற்கு பின்னர் கோவிலுக்கு குழந்தையை எடுத்துச்சென்று ஆயர் முன்னிலையில் ஜெபித்து பெயர் வைத்து விட்டு காணிக்கையாக பணத்தை செலுத்தி விட்டு வருவோம்.

ஆனால் இயேசுவுக்கு அப்படி நடக்கவில்லை. இயேசுநாதர் பிறந்து எட்டாம் நாளிலே அவருக்கு பெயரிடவும், பலி செலுத்தி காணிக்கை படைக்கவும் அவருடைய பெற்றோர் அவரை எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த சிமியோன் என்பவர் நீதியும், தேவபக்தியும் உள்ளவர். இன்னொருவர் அன்னாள். இவர் இரவும், பகலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், ஜெபித்து ஆராதனை செய்து வருபவர். இவர்கள் இருவரும் இயேசு தேவாலயத்திற்கு வந்ததை கண்டவுடன் இவர்களோடு அங்கிருந்தவர்களிடம் இயேசுவை புகழ்ந்து பேசினார்கள் என்று வேதாகமத்தில் லூக்கா 2-ம் அதிகாரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவர்கள் இருவரின் முன்னிலையில் இயேசுநாதர் தேவாலயத்தில் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டார். அங்கு ஏராளமான பலி பொருட்கள் படைக்கப்பட்டிருந்தது. அந்த பலி பொருட்களோடு சேர்த்து இயேசுநாதரும் ஜீவ பலியாகவே படைக்கப்பட்டார் என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது.

இப்படி குழந்தையாய் இருக்கும் போதே இயேசு என்று பெயரிட்டு நமக்காக நம்முடைய வாழ்க்கையாக அவரையே ஜீவ பலியாய் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஆனால் நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம். கோவிலுக்கு சென்றால் பல்வேறு வகையில் பொருட்களை கொண்டு போய் படைக்கிறோம். ஆனால் இயேசுவானவரோ நம் இதயத்தை அவருக்காக ஒப்படைக்க கேட்கிறார்.

எனவே இந்த தவக்காலத்தில் ஜீவ பலியாய் தன்னையே நமக்காக ஒப்புக்கொடுத்தது போல நாம் ஜீவ பலியாய் தன்னை ஒப்புக்கொடுத்து நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அவரையே நம்பி இருக்கிற நாமும் நம்முடைய ஆவி, ஆத்மா, சரீரத்தை இயேசுவின் அன்பின் கரத்திற்குள் ஒப்புக்கொடுப்போம். ஆமென்.

ரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
Tags:    

Similar News