ஆன்மிகம்
இயேசு

நம்முடைய எஜமானாகிய இயேசு

Published On 2020-09-19 08:00 GMT   |   Update On 2020-09-19 08:00 GMT
நம்முடைய எஜமானாகிய இயேசுவும், நம்மை நல்லவர்களாக மாற்றி மற்றவர்களுக்கு உபயோகப்படும் படி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
ஒரு அருமையான தம்பதியினர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்றிருந்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மண்பானை ஒன்றை வாங்கலாம் என்று எண்ணி அந்த அழகிய மண்பானையை எடுத்து எவ்வளவு விலையென்றாலும் இதை வாங்கி இதில் தண்ணீர் நிரப்பி தாகத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். அப்போது அந்த மண்பானை பேச ஆரம்பித்தது.

அன்பானவர்களே, என் மீது நீங்கள் வைத்த அன்பிற்காக நன்றி, என்னுடைய கதையை சொல்லுகிறேன் கொஞ்சம் கேளுங்கள். இன்று மிக அழகாக, கம்பீரமாக, மிடுக்காக தோற்றமளிக்கும் நான் முன்பு எப்படி இருந்தேன் தெரியுமா? மிகவும் மோசமான நிலையில் ஒருவரும் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் எல்லோராலும் மிதிபடும் நிலையில் வெறும் களிமண்ணாக இருந்தேன். அப்போது என் எஜமான் (பானை செய்கிறவர்) என்னை எடுத்தார். நான் அவரை பார்த்து, என்னை விட்டு விடுங்கள், நான் இப்படியே இருந்துவிடுகிறேன் என்று கதறினேன், அவரோ, அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

என் மீது தண்ணீரை ஊற்றி கையால் அழுத்தி, கால்களால் மிதித்தார். பின்னர் எனக்குள் இருந்த வேண்டாத குப்பைகள், கற்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வீசினார். அப்போது நான் சுத்தமாகி, களிமண்ணாக இருந்த என்னை இவ்வளவு அழகான பானையாக மாற்றி உங்கள் மனம் குளிரும் விதமாக மாற்றி இருக்கிறார்.

இப்படி களிமண்ணாக இருந்த என்னை நீங்கள் உபயோகப்படுத்தும் பொருளாகவும், என்னை நீங்கள் உங்கள் வீட்டில் வைத்து தினமும் என்னை கவனிக்கும்படியாகவும் செய்துள்ளார் என்று கூறியது.

எனவே தேவ பிள்ளைகளே இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், நாமும் இப்படித்தான் இந்த உலகத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் அடிபட்டு, மிதிபட்டு சோர்ந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய எஜமானாகிய இயேசுவும், நம்மை நல்லவர்களாக மாற்றி மற்றவர்களுக்கு உபயோகப்படும் படி செய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதை நாம் இந்த தவக்காலத்தில் மறந்து போகக்கூடாது.

வேதாகமத்தில் ரோமர் 8-ம் அதிகாரம் 29-ம் வசனத்தில், தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

எனவே தேவ பிள்ளைகளே நாமும் தேவனிடத்தில் நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கும் போது, வெறும் களிமண்ணை எடுத்து பானையாக செய்து மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக செய்ததை போல, தேவன் நம்மையும் இயேசுவின் சாயலாக அழகாக மாற்ற வல்லவராய் இருக்கிறார் என்பதை நினைவு கூறுவோம் ஆமென்.

ரபிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.
Tags:    

Similar News