ஆன்மிகம்
முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலயம் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய திருவிழா: முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் பங்கேற்பு

Published On 2020-09-12 04:35 GMT   |   Update On 2020-09-12 04:35 GMT
முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய 8-ம் நாள் திருவிழாவில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டார்.
குமரி மாவட்டம் முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய (பசிலிக்கா) திருவிழா கடந்த 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அரசு வழிகாட்டுதல்படி எளிமையாக நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6.15 மணி மற்றும் 10.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் திருப்பலியும் நடக்கிறது.

விழாவை ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ் கொடி ஏற்றி திருப்பலியில் மறையுரையாற்றினார்். அப்போது பல்சமய தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கடந்த 9-ந் தேதி தூய சகாய அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலய வளாகத்தில் பக்தர்கள் இறை வேண்டுதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று 8-ம் நாள் திருவிழா நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார். இன்று (சனிக்கிழமை) காலை 6.15 மணி, 10.30 மணிக்கு திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் 9-ந் திருவிழா திருப்பலியும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆன்டனிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும், காலை 11 மணிக்கு மலையாள திருப்பலியும், மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும் நடக்கிறது.

இன்றும், நாளையும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆலய வளாகத்தில் பக்தர்கள் இறை வேண்டுதலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

விழா ஏற்பாடுகளை முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய பங்கு தந்தை டோமினிக் எம் கடாட்சதாஸ் தலைமையில் இணை பங்குதந்தை தாமஸ், ஆன்மிக தந்தை ஆன்டனி, இல்ல அருட்பணியாளர்கள், பங்கு அருட்சகோதரிகள், பசிலிக்கா பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோன் மணி, துணை செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜிகலா, பங்கு மக்கள் இணைந்து பசிலிக்கா பங்கு அருட்பணி பேரவையினர் செய்துள்ளனர்.

முளகுமூடு தூய மரியன்னை திருத்தல பேராலய பங்கு தந்தை டோமினிக் எம் கடாட்சதாஸ் கூறுகையில், தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக (திருத்தலமாக) கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி போப் பிரான்ஸிசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேராலயம், வேளாங்கண்ணி பேராலயம், பூண்டி மாதா பேராலயம், திருச்சி உலக மீட்பர் பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பேராலயத்தை தொடர்ந்து முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் 7-வது பேராலயமாக (பசிலிக்கா) திகழ்கிறது. பசிலிக்கா அறிவிப்பு மற்றும் பெருவிழா கொரோனா தொற்றுக்கு தீர்வு எட்டியவுடன் சிறப்பாக நடைபெற உள்ளது என்றார்.
Tags:    

Similar News