ஆன்மிகம்
கிறிஸ்தவ ஆலயங்கள் இன்று முதல் திறக்கப்படும்

கிறிஸ்தவ ஆலயங்கள் இன்று முதல் திறக்கப்படும்: கத்தோலிக்க- தென்னிந்திய திருச்சபை ஆயர்கள் அறிவிப்பு

Published On 2020-09-01 11:05 IST   |   Update On 2020-09-01 11:05:00 IST
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்தவ ஆலயங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படும் என்று கத்தோலிக்க திருச்சபை மற்றும் தென்னிந்திய திருச்சபை ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டபோது ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக வருவாய் உள்ள வழிபாட்டு தலங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை வழங்கியது. இதன்காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து பெரிய கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள், மசூதிகள் திறக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறியதாவது:-

அனைத்து வழிபாட்டு தலங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இன்று முதல் கோட்டார் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் திறக்கப்படுகின்றன. இதற்கான சுற்றறிக்கை அனைத்து ஆலய பங்குத்தந்தையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கை, கால்களை சுத்தம் செய்த பிறகு ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் ஆலயங்களில் நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆலயத்துக்கு வருகிறவர்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா? என்பதை பங்கு அருட்பணி பேரவை, பக்த சபைகளை சேர்ந்தவர்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பங்குத்தந்தையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது. இதுபோன்ற அரசின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினர்.

தென்னிந்திய திருச்சபை குமரி பேராயர் ஏ.ஆர்.செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் நோய் தடுப்பு நடவடிக்கையில் இதுவரை ஒத்துழைப்பு அளித்தோம். 5 மாதங்கள் ஆலய ஆராதனைகள் முறைப்படி நடத்த இயலவில்லை. எனினும் தற்போது இன்று (1-ந் தேதி) முதல் ஆராதனை நடத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தந்துள்ளது. அரசு எடுத்து வரும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர கேட்டுக் கொள்கிறேன். இதனால் நோய் பரவலை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தென்னிந்திய திருச்சபை குமரி பேராய மக்களாக நாம் மிக பணிவோடும், பொறுப்போடும் ஆலயங்களில் கடைபிடிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மற்ற மறைமாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதற்காக நேற்று ஆலயங்களை சுத்தம் செய்யும் பணி நடந்தது.

Similar News