ஆன்மிகம்
புதுவை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வந்த கிறிஸ்தவர்கள்

வேளாங்கண்ணிக்கு அனுமதி மறுப்பு: புதுவை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

Published On 2020-08-31 04:27 GMT   |   Update On 2020-08-31 04:27 GMT
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதால் புதுவை தூய இருதய ஆண்டவர் தேவாலத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொள்ள சென்னை, காஞ்சீபுரம், திண்டிவனம், மரக்காணம் கோட்டக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு புதுச்சேரி வழியாக நடந்து செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு புனித பாதயாத்திரையாக பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். அவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் புதுவை, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்ல முடியாததால் புதுவை ரெயில் நிலையம் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்திற்கு சிறிய சிற்பம் மாதா சிலையை வைத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதனை அடுத்து அவர்கள் தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் கொரோனா பரவல் காரணமாக பேராலயத்தில் கூட்டம் கூட வேண்டாம் என்று ஒலிபெருக்கியில் எச்சரித்தனர்.

இதேபோல் அரியாங்குப்பம் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அரியாங்குப்பம் மாதா கோவிலில் நேற்று காலை பிரார்த்தனை செய்தனர். அங்கு கூட்டம் கூடியதால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
Tags:    

Similar News