ஆன்மிகம்
இயேசு

பார்வையற்றவர்களும் பார்வை பெறலாம்

Published On 2020-08-04 08:37 GMT   |   Update On 2020-08-04 08:37 GMT
எகிப்தியரின் அடிமைத்தளையில் இருந்து மீட்டு, வாக்களிக்கப்பட்ட தேசம் நோக்கி இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றவர் மோசே. செல்லும் வழியில் சீனாய் மலையில் அவர்களுக்குக் கடவுளிடம் இருந்து பத்து கட்டளைகளைப் பெற்றுத்தந்தார்.
எகிப்தியரின் அடிமைத்தளையில் இருந்து மீட்டு, வாக்களிக்கப்பட்ட தேசம் நோக்கி இஸ்ரவேலரை வழிநடத்திச் சென்றவர் மோசே. செல்லும் வழியில் சீனாய் மலையில் அவர்களுக்குக் கடவுளிடம் இருந்து பத்து கட்டளைகளைப் பெற்றுத்தந்தார்.

மோசேவை, தங்களின் குரு மரபில் முதன்மையானவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, பிற்காலத்தில் இயேசுவுக்கு தாங்கள் வழிபடும் பரலோகத் தந்தை சக்தியளிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘மோசேவை விடவும் இயேசு உயர்ந்தவர் இல்லை’ என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது. அவர்களது இந்தப் பார்வை, கண்கள் இருந்தும் இயேசு வாக்களிக்கப்பட்ட இறைமகன் என்பதைக் காண முடியாத அவர்களது குருட்டுத் தன்மையைக் காட்டியது. அவர்களது கண்களை திறக்க வேண்டும் என்பதற்காகவே, பிறவியிலேயே பார்வையற்றவனுக்கு பார்வை கிடைக்கச் செய்தார் இயேசு.

யூதேயாவில் அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த ஒருவனைக் கண்டார். அப்போது இயேசுவின் சீடர்கள், “ரபீ, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா?, இவனுடைய பெற்றோர் செய்த பாவமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு இயேசு, “இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய பெற்றோர் செய்த பாவமும் இல்லை; கடவுளாகிய பரலோகத் தந்தையின் செயல்கள் இவன் மூலம் வெளிப்படும்படியே இப்படிப் பிறந்திருக்கிறான். என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகல் வேளையிலேயே நாம் செய்ய வேண்டும்; இரவு வேளை வரப்போகிறது, அப்போது எந்த மனிதனாலும் வேலை செய்ய முடியாது. இந்த உலகத்தில் இருக்கும்வரை, நான் இந்த உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன்” என்றார்.

பிறகு தரையில் குனிந்து தன் கைகளில் களிமண்ணை எடுத்தார். அதைத் தன் உமிழ்நீரால் குழைத்து, பார்வையற்ற மனிதனின் கண்கள் மீது பூசினார். பிறகு அவனிடம் “நீ போய் அருகிலிருக்கும் சீலோவாம் குளத்தில் உன் கண்களைக் கழுவு” என்றார். அவனும் போய் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தான். ஆனால் அவன் வருவதற்குள் இயேசு அங்கிருந்து அகன்று சென்றார். உலகைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் தனக்கு ஒளிகொடுத்த இயேசுவைத் தேடினான்.

பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந் தவன் தற்போது பார்வை பெற்றவனாக மாறியதைக் கண்ட யூதர்கள், அவனைப் பரிசேயர்களிடம் அழைத்துச் சென்றார்கள். இயேசு மண்ணைக் குழைத்து அவனுடைய கண்கள் மீது பூசிய நாள் ஓய்வு நாளாக இருந்தது. அதனால் பரிசேயர்களும், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்” என்று அவனிடம் கேட்டார்கள். அதற்கு அவன், “களிமண்ணை அவர் என் கண்கள் மீது பூசினார்; நான் அதைக் கழுவி, பார்வை பெற் றேன்” என்றான். அவனது சாட்சியைக் கேட்டு கோபம் கொண்ட பரிசேயர்களில் சிலர் அவனைத் துரத்தியடித்தார்கள்.

‘பார்வை பெற்றவனைத் துரத்திவிட்டார்கள்’ என்ற செய்தி இயேசுவுக்கு வந்துசேர்ந்தது. பிறகு பார்வை பெற்றவனை இயேசு கண்டபோது, “மனித குமாரன் மீது நீ விசுவாசம் வைக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், “ஐயா, அவர் யார் என்று சொல்லுங்கள்; அப்போது நான் விசுவாசம் வைப்பேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ அவரைப் பார்த்திருக்கிறாய்; உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் நானே அவர்” என்றார். உடனடியாக அவன், “எஜமானே, நான் விசுவாசம் வைக்கிறேன்” என்று சொல்லி அவர் முன் தலைவணங்கினான்.

நீங்கள் பார்வை பெற்றவரா, இல்லை யூதர்களைப்போல் பார்வையிருந்தும் காண முடியாதவர்களாய் இருக்கிறீர்களா? ‘மற்றவர்களுக்கு ஒளியாக வாழக் கற்றுக்கொள்வதே சீடத்துவ வாழ்வு’ என்பதை இந்த நிகழ்வு நம் பார்வைக்கு எடுத்து வருகிறது.
Tags:    

Similar News