ஆன்மிகம்
இயேசு

நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துவோம்

Published On 2020-07-08 08:39 GMT   |   Update On 2020-07-08 08:39 GMT
நாம் திட்டமிட்டு செயல்பட ஆரம்பிக்கின்ற போது எல்லாமே மேன்மைக்குரியதாய் தோன்றும். வாழ்வும், வளர்ச்சியின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும்.
காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது. அருமையை உணர்ந்தவர்களே சாதனையாளர்கள். கிடைக்கின்ற நேரத்தை முழுமையாக திட்டமிட்டு பயன்படுத்த நாம் உணர்ந்திட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் என காலத்தை ஒதுக்கி செயல்படுத்த பழக வேண்டும். நேரம் என்பது உங்களுக்காக கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளது. அச்சசெல்வத்தை மற்றவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்த ஒருபோதும் அனுமதித்து வாழ்வை இழந்து விடாதீர்கள், ஏமாந்து போய் விடாதீர்கள்.

காலத்தை நமது லட்சியங்களை அடைவதற்கு முறையாக பயன்படுத்தி விடுங்கள். எதையும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகின்ற காலசாரத்தை முழுமையாய் விட்டு விடுங்கள். இன்றே இப்பொழுதே என திட்டமிட்டு செயல்களை செய்வதற்கு பழகிடுங்கள். தற்போது கிடைக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உரியது என்ற மனநிலையோடு ஓடிக்கொண்டேயிருங்கள். மனஉறுதியோடு உழைத்து கொண்டே இருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டுமென்ற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

நேரத்தை சரியாக பயன்படுத்த தெரிந்தவன் மாபெரும் சாதனையாளன், வெற்றியாளன். இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற வழிமுறையினை கண்டுபிடிப்போம். நாள் ஒன்றில் ஒரு நல்ல செயல் என்பன போன்று இன்றைய நாளில் நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாட்களை முறையாக பயன்படுத்துவதற்கான வழிமுறையினை கண்டுபிடிப்போம். காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கென்று முதல் ஒரு மணிநேரத்தை ஒதுக்கிவிடுவோம். கடவுளோடு இணைந்து உரையாடி, உறவாடி நமது திட்டமிடுதலை தொடங்குவோம். எல்லாம் சிறப்புக்குரியதால் ஆரம்பமாகும். அடுத்ததாய் இன்றையநாளில் நான் புதியதாய் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை கண்டுபிடிப்போம். அதில் முதன்மைபடுத்த வேண்டியதை முதலில் அடையாளப்படுத்திடுவோம்.

இரண்டாவதாக ஏற்கனவே நாம் திட்டமிட்டவைகளில் மீண்டும் மெருகேற்றி முன்னிலைப்படுத்த வேண்டியதை பட்டியலிடுவோம். அதற்கு நாம் செலவு செய்ய வேண்டிய நேரம், ஆற்றல் போன்றவற்றை கணக்கெடுத்து அதற்கேற்ற வழியில் செயல்பட ஆரம்பிப்போம். இறுதியாக நமது வாழ்வின் மகிழ்ச்சிக்கும், பொழுது போக்கிற்கும் என நேரங்களை ஒதுக்கி வைத்து கொள்வோம். இப்படியாக நாம் திட்டமிட்டு செயல்பட ஆரம்பிக்கின்ற போது எல்லாமே மேன்மைக்குரியதாய் தோன்றும். வாழ்வும், வளர்ச்சியின் பாதையில் பயணம் செய்ய ஆரம்பிக்கும்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
Tags:    

Similar News