ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயம்

சிறப்பு வாய்ந்த பூண்டி மாதா பேராலயம்- திருக்காட்டுப்பள்ளி

Published On 2020-06-27 08:45 GMT   |   Update On 2020-06-27 08:45 GMT
பூண்டி மாதா பேராலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பூண்டி மாதா பேராலயம் (Poondi Madha Basilica) தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

வரலாறு :

(1714-1718) 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சமயத்தில் ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் (Church of Mary Queen of Immaculate Conception) என்று அழைக்கப்பட்டு வந்தது.

1955-ல் இக்கோவிலின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய தந்தை லூர்து சேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார். ஆலயத்தின் உள் கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிராத்தனை செய்தார்.

அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் பூண்டி மாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியர் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. அருட்தந்தை லூர்து சேவியரின் உடல் பூண்டி மாதா கோவிலின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் புனித தன்மையை உணர்ந்து, 1999-ல் இக்கோவிலுக்கு போப் ஜான் பால் II அவர்களால் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

திருச்சிலுவை :

பூண்டி மாதா திருத்தலத்தின் பலிபீடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்ததாக கூறப்படும் திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம் :

பூண்டி மாதா கோவில் வளாகத்தில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அவர்கள் சாட்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களும் தங்க ஆபரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தங்கும் வசதிகள் :

கோவில் நிர்வாகத்தின் மூலம் மிக குறைந்த விலையில் தங்குமிடமும் உணவகமும் பக்தர்களின் வசதிக்காக நடத்தப்படுகிறது. 1 வது மற்றும் 3வது சனிக்கிழமைகளில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 24 மணி நேர இலவச குடி தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதியும் உண்டு. மிகப்பெரிய தானுந்து (கார்), விசையுந்து (பைக்கு) களுக்கான நிறுத்துமிட வசதியும் உண்டு. இலவச தங்குமிடமும் உண்டு. மிக குறைந்த வாடகைக்கு திருமண மண்டபமும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆராதனைக்கூடம் :

தனிமையில் பிரார்த்தனை செய்ய விரும்புவோர்க்கென பூண்டி மாதா பேராலயத்தில் அமைதியான ஆராதனைக்கூடம் ஒன்று பல லட்சம் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது பூண்டி மாதா பேராலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் இருந்து மாடிக்குச் சென்று பிரார்த்திக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் :

அருகில் உள்ள பேருந்து நிலையம் திருக்காட்டுப்பள்ளி. அருகில் உள்ள இரயில் நிலையம் பூதலூர். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இப்பேராலயத்தை திருச்சி - செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாகவும் திருச்சி - இலால்குடி - செங்கரையூர் மார்க்கமாகவும் தஞ்சை - பூதலூர் மார்க்கமாகவும் வந்தடையலாம்.
Tags:    

Similar News