ஆன்மிகம்
இயேசு

உண்மையாக வாழ வேண்டும்

Published On 2020-06-06 08:13 GMT   |   Update On 2020-06-06 08:13 GMT
உண்மையை பேசுவதினால் நமக்கு பிரச்சினையும், அவமானமும் வந்தாலும் நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பதினால் நாம் உண்மையையே பேச வேண்டும்.

நாம் இந்த உலகில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், நம் மனதிலே உண்மை இல்லாதவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த லெந்து நாட்களில் இயேசு எப்படி கடவுளிடம் உண்மையாக இருந்தார் என்று சற்று தியானித்து பார்ப்போம்.உள்ளதை உள்ளபடியே சொல்லும் தன்மையே உண்மை என்று பைபிள் நமக்கு கற்றுத்தருகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுள் நம்மிடத்தில் விரும்புகிறார். இயேசுவும் கடவுளுக்கு பயந்து உண்மைக்கு அடையாளமாக வாழ்ந்து காட்டினார்.

யூதர்களை ரோமர்கள் ஆண்டு வந்த காலத்தில் ரோமர்களுக்கு யூதர்கள் வரி செலுத்த வேண்டும். ஆனால் இயேசுவோ யூதர் ஆனபடியினால் தனக்குரிய பணத்தை ரோமர்களுக்கு சரியாக வரி செலுத்தினார் என்று வேதாகமத்தில் மத்தேயு 17: 24-27-ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இயேசுவிடம் குற்றம் கண்டு பிடிக்கும் பொருட்டு ராயனுக்கு வரி செலுத்துவது நியாயமோ? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்று கூறினார். இதைத்தான் வேதாகமத்தில் மத்தேயு 22: 17-21 மற்றும் யோவான் 18:1-8-ல் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

இப்படி உண்மையாய் இருந்த இயேசுவின் மேல் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கொலை செய்ய திட்டமிட்டு போர்ச்சேவகர்கள் இயேசுவை பிடிக்க வந்த போது இயேசு அவர்களை பார்த்து யாரை தேடுகிறீர்கள்? என்று கேட்ட போது நசரேயனாகிய இயேசுவை தேடுகிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அப்போது இயேசு தனக்கு தீமை நேரிடப்போகிறது என்று தெரிந்தும் அவர்களை நோக்கி நான்தான் நசரேயனாகிய இயேசு என்று உண்மையை தைரியமாக கூறினார் என்று நாம் வேதத்தில் படிக்கிறோம்.

இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நாமும் நம்முடைய காரியங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உண்மையாயிருக்க தேவன் விரும்புகிறார். உண்மையை பேசுவதினால் நமக்கு பிரச்சினையும், அவமானமும் வந்தாலும் நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பதினால் நாம் உண்மையையே பேச வேண்டும். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் என்ற வேத வசனத்தின்படி நாம் செயல்படுவோம், ஆமென்.

பாஸ்டர். சாம் கிப்ட்சன், நற்செய்தி ஊழியம், திருப்பூர். 
Tags:    

Similar News