ஆன்மிகம்
புனிதமாக மாறிய சிலுவை

புனிதமாக மாறிய சிலுவை

Published On 2020-05-27 04:31 GMT   |   Update On 2020-05-27 04:31 GMT
சிலுவையில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்னும் பின்னும் பலர் மரித்திருக்கிறார்கள் என்றாலும் அதில் மரித்த கிறிஸ்துவின் மரணத்தால் தான் சிலுவைக்கு ஒரு மகிமையை அல்லது மேன்மையை கொண்டு வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
சிலுவை மரணத்தண்டனை என்பது ரோமர்கள் ஏற்படுத்துவது ஆகும். சிலுவையில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்னும் பின்னும் பலர் மரித்திருக்கிறார்கள் என்றாலும் அதில் மரித்த கிறிஸ்துவின் மரணத்தால் தான் சிலுவைக்கு ஒரு மகிமையை அல்லது மேன்மையை கொண்டு வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அதுவரை சாபமாக இருந்த சிலுவை அதன் பிறகு புனிதமாக மாறியது. இதனால் பல வீடுகளிலும், ஆலயங்களையும், கல்லறைகளிலும் கூட அடையாளங்களாக இடம்பெற்றுள்ளது. கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது அவர் பிறப்பதற்கு முன்னும் அதில் அவர் மரிப்பதற்கு முன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன்னுரைக்கப்பட்டு வந்த தேவனுடைய தெளிவான தீர்க்கத்தரிசனமாகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் அவரது பிறப்பு பெயர் உள்பட அவரது பாடு, மரணம், உயர்த்தெழுதல், என அனைத்தும் அவரை குறித்து முன்னுரைக்கப்பட்ட படியே நடந்தது என்பதை நாம் அறியவேண்டும்.

இனி அவருடைய வருகையிலும் அப்படியே நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் மரிக்கிற ஒவ்வொருவருடைய மரணங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு அவசியம் என்ன? ஐயோ இன்னும் இருந்திருக்கலாமோ? அதற்கு இதுதான் முடிவா? என்பது போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு. என்ன சொன்னாலும் ஏற்க முடியாத நிலையும் அதில் நமக்கு உண்டு. ஆனால் இயேசுவின் சிலுமை மரணம் அப்படியல்ல. அது தேவப்பார்வையில், தேவசித்தத்தின்படி அவசியம் என்பதாகவே இருந்தது. அவருடைய மரணத்தை குறித்து பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்டுள்ள பல அவசியமான காரணங்களுள் இரண்டை இங்கு குறிப்பிடுகிறேன் கவனியுங்கள். நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாய் இருக்கிறார் (1 யோவான்:2:2).

இந்த வசனத்தின் வேதம் நமக்கு 2 விஷயங்களை காட்டுகிறது. ஒன்று பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அதாவது நாம் செய்யும் பாவங்களுக்காக அவரை பலியாக ஒப்புக்கொடுக்க தேவன் நினைத்தது. இரண்டாவதாக சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலி அதாவது அனைத்து உலகின் பாவங்களுக்காகவும், மக்களின் பாவங்களுக்காகவும் அவரை கல்வாரி சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க சித்தமானது.

எபிரேயர் 9:22-ல் ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதம் நமக்கு சொல்கிறது. ஆகவேதான் இயேசுவின் சிலுவை மரணம் அவசியமாயிருந்தது. அதில் சிந்தப்பட்ட ரத்தத்தினாலேயே மாத்திரம் இரட்சிப்பு அல்லது மீட்பு மனிதனுக்கு உண்டாகிறது. இந்த பரிசுத்தமான வாழ்வை வாழ நாம் இந்த தவக்காலத்தில் பரிசுத்த இயேசு நமக்காக சிலுவையில் அனுபவித்த பாடுகளை நினைத்து நாம் அவருடைய வேத வாக்கியங்களின் படி கீழ்படிந்து வாழ்வோமாக.

பாஸ்டர் என்.எட்வர்ட் சிரஞ்சீவி,

எழுப்புதல் பேரொலி தேவ சபை,

அறிவொளி நகர், பல்லடம்.
Tags:    

Similar News