ஆன்மிகம்
இயேசு

மனஉறுதியை பெற்றிடுவோம்

Published On 2020-05-26 09:32 IST   |   Update On 2020-05-26 09:32:00 IST
எவ்விதமான குழப்பமான சூழல்களையும் எதிர்கொள்கின்ற போது அச்சப்படாது மன உறுதிபாட்டோடு நல்ல முடிவுகளை எடுப்போம்.
உலகில் தலைசிறந்த நிறுவனத்தை திறம்பட வழிநடத்திட விருப்பம் உள்ள மனிதராக மாறுவதற்கு ஆசை இருக்கிறதா? அதற்கு தேவையானது மன உறுதியே ஆகும். மன உறுதியினை பற்றி திருவள்ளுவர் தனது திருக்குறளில் வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு அதாவது நீர் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அல்லி மலர் நீரின் மேற்பரப்பில் வந்து பூக்கும். அதைப்போன்று நமது லட்சியத்தை அடைந்திட வேண்டும் என்றால் நாமும் மன உறுதிப்பாட்டுடன் நமது எல்லாத்தடைகளையும் கடந்து செயலாற்றிட வேண்டும். இன்யை உலக வாழ்வில் நாம் ஒவ்வொருவருமே ஏராளமான தடைகளை நிச்சயமாய் அனுபவித்து இருப்போம். சில சமயங்களில் வெற்றியுடன் நிறைவு செய்திட இயலுமா? என்ற சந்தேகம் கூட நமது மனதில் தோன்றலாம்.

சிக்கல்கள் பிரச்சனைகள் நம்மை நசுக்கி விடாமல் நம்முடைய திறமையினால் அதனை எதிர்கொள்ள வேண்டும். பொது வாழ்வினில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எல்லா சூழல்களிலும் அளவுக்கு அதிகமான விடாமுயற்சி இருக்க வேண்டும். ஆத்மார்த்தமான நம் மனதில் உள்ளிருந்து தோன்றும் ஆசை தூய்மையானதாக இருக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய மின்காந்த சக்தியை உடையதாக விளங்குகிறது.

மனிதா சூரிய உதயம் எப்படி தவிர்க்க முடியாதோ அது போன்று உன்னுடைய வெற்றியையும் தவிர்க்க முடியாது. உன்னுடைய ஆசைகளும், லட்சியமும் நிறைவேறும் நாள் நிச்சயம் வரும். அப்போது தோல்வி மனப்பான்மை நம்மில் இருந்து அகன்று போகும்.

இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய சிறப்பு பண்புகளில் உள்ள உறுதியும் ஒன்றாகும். இறைமகள் இயேசு தீமையை வெல்ல முடியும். என்று அவர் கொண்டிருந்த உள்ள உறுதிப்பாடு ஏராளமான நன்மை தனங்களில் பிறப்பாய் அமைந்தது. ஆதலால்தான் அவர் சென்ற இடமெங்கும் நன்மை விளைந்தது என பார்க்கிறோம். இத்தகைய மனப்பக்குவத்தை பெற இந்த நாளில் முயற்சி எடுப்போம். சிறுசிறு முடிவுகளை முன்னெடுக்கின்ற போதே எத்தகைய மனப்பக்குவத்தோடு செயலாற்ற வேண்டும் என சிந்திப்போம். எவ்விதமான குழப்பமான சூழல்களையும் எதிர்கொள்கின்ற போது அச்சப்படாது மன உறுதிபாட்டோடு நல்ல முடிவுகளை எடுப்போம். நமது முடிவுகள் சமுதாயத்தின் மேன்மைக்கும், வளமைக்கும் என்றும் பயன் கொடுக்கட்டும்.

அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறை மாவட்டம் 

Similar News