ஆன்மிகம்
பாவத்தை போக்கும் சிலுவை

பாவத்தை போக்கும் சிலுவை

Published On 2020-05-11 03:51 GMT   |   Update On 2020-05-11 03:51 GMT
இயேசுக்கு பிடிக்காத காரியங்களை அதே சிலுவையில் இன்று அறைவோம். அருவருப்பான எல்லா பாவங்களையும் இன்று சிலுவையில் அறைவோம். மீட்பைபெறுவோம். சிலுவை சாபம் அல்ல! அது பாவத்தை போக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். இந்த லெந்து நாட்களில் கிறிஸ்துவின் பாதத்தை அதிகமாய் பற்றிப்பிடிப்போம்.

மாற்கு 15:13-ல் இயேசுவை சிலுவையில் அறையும் என்று திரள் கூட்ட மக்கள் சத்தமாய் சொன்னார்கள் என்று பார்க்கிறோம். ஏன்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட வேண்டும். சற்று சிந்திப்போம்.

அன்புக்குரியவர்களே! ஒருவர் சட்டத்தை மீறினால் அல்லது குற்றம் செய்தால்தான் அவர் மீது நடவடிக்கையும், தண்டனையும் தர முடியும். ஆனால் இயேசு கிறிஸ்து அப்படி என்ன தவறு செய்தார் என்று சற்று வேதாகமத்தை நாம் தியானித்தால்... நமக்கு ஆச்சரியமே தோன்றும். இயேசுவை குறித்து நான்கு பேர் சாட்சி தருவதை படித்துப்பார்த்தாலே தெரிந்துவிடும். இன்றைய சட்ட விதியில் ஒன்று அல்லது இரண்டு சாட்சிகள் இருந்து அவர்கள் தெரிவிப்பதை வைத்துத்தான் தீர்ப்பு சொல்லப்படுகிறது. முதலாவது மத் 27:4-ல் யூதாஸ்காரியோத் இயேசுவைப் பற்றி குற்றமில்லா ரத்தம் என்று வர்ணிக்கிறார். இரண்டாவது மத் 27:19-ல் பிலாத்துவின் மனைவி இயேசுவை பற்றி நீதிமான் என்று சொல்லுகிறார். மூன்றாவது லூக்கா 23:15-ல் பிலாத்து இயேசுவை பற்றி ஒருகுற்றமும் இல்லாதவர் என்று சொல்லுகிறார். நான்காவதாக லூக்கா 23:47-ல் நூற்றுக்கு அதிபதி இயேசுவை பற்றி நீதிபரன் என்று சொல்லுகிறார். இந்த நான்கு பேரும் இயேசுவைப்பற்றி சொன்ன வார்த்தைகளை கவனித்தீர்களா! ஆம்! பிரியமானவர்களே ! பாவமறியாத அந்த மெய்தெய்வத்தைதான் அநியாயமாய் குற்றம் சாட்டி சிலுவையில் அறையும் என்று கத்தினார்கள்.

தன்மீது வீண்பழி சுமத்தப்பட்டது அறிந்தும் தன் விவாதங்களை நீதிக்கு முன் சமர்ப்பிக்காமல் தன்னைதானே ஒப்புக்கொடுத்து சிலுவையை ஏற்றுக்கொண்டார். ஏன் தெரியுமா? உங்களுக்காகத்தான்! ஆம்! நம் அனைவருக்காகவும்தான்! சிலுவை என்பது குற்றவாளிகளின் சின்னம், அதை புனித சின்னமாக மாற்றிய இயேசு அதே சிலுவையில் பலியானார். இந்த தியான நாட்களிலே, நாம் நம் குடும்பத்திலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், இருக்கிற பாவங்களை, இயேசுக்கு பிடிக்காத காரியங்களை அதே சிலுவையில் இன்று அறைவோம். அருவருப்பான எல்லா பாவங்களையும் இன்று சிலுவையில் அறைவோம். மீட்பைபெறுவோம். சிலுவை சாபம் அல்ல! அது பாவத்தை போக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

போதகர் பரமானந்தம்

சிட்டி ஏஜி சபை, திருப்பூர்.
Tags:    

Similar News