ஆன்மிகம்
இயேசு

மரணம் என்பது மகிழ்ச்சியே

Published On 2020-05-09 04:44 GMT   |   Update On 2020-05-09 04:44 GMT
இயேசுநாதரின் சிலுவை மரணம், பாடுகள், வேதனைகள் நிறைந்ததாயிருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் குழந்தையின் குடும்பங்கள் ஒன்றாக்கப்படுவது போல், இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மனிதர்களாகிய நாம் கடவுளுடன் சேர்க்கப்படுகிறோம்.
நம் உடலை விட்டு உயிர் கடவுளிடம் செல்வதை மரணம் என்கிறோம். நம் உடலுக்குள் உயிர் கடவுளிடமிருந்து பூமிக்கு வருவதை பிறப்பு என்கிறோம். ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தால் இரு குடும்பங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. அவர்களை சார்ந்த உறவுகளுக்கு சந்தோஷம் உண்டாகிறது. அந்த குழந்தையின் நிமித்தம் இரு குடும்பங்கள், பகைமை பொறுப்புகளை களைந்துவிட்டு ஒன்றாகிறார்கள். ஆனால் மரணத்தாலோ, பிரிவின் நிமித்தம் ஏமாற்றம், கவலை, துக்கம், அழுகை, புலம்பல் உண்டாகிறது.

இங்கு இயேசுநாதரின் சிலுவை மரணம், பாடுகள், வேதனைகள் நிறைந்ததாயிருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் குழந்தையின் குடும்பங்கள் ஒன்றாக்கப்படுவது போல், இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மனிதர்களாகிய நாம் கடவுளுடன் சேர்க்கப்படுகிறோம். (எபே: 2: 13-17) கடவுளின் வார்த்தைக்கு கீழ்படியாத ஆதாம், ஏவாளின் மூலம் பாவம் உருவாகி, அவர்களுடைய சந்ததியாகிய நமக்குள்ளும் பாவம் தொடர்ந்து வருகின்றது. இந்த பாவத்தின் விளைவினால் நமக்கும், தேவனுக்கும் ஒரு மிகப்பெரிய இடைவெளி உண்டாயிற்று. பாவத்தின் முடிவு மரணம் என்று பைபிள் கூறுகின்றது. அதுமட்டுமல்ல நம் உடலில் குடி, போதை, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், ஒழுங்கற்ற பாலியல் உறவுகள் போன்ற பாவத்தின் நிமித்தம் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுகிறது.

முடிவில்லாத வேதனையும், தண்டனையும் உண்டு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஒரு கல்லூரியிலோ அல்லது வெளியில் தவறும் செய்யும் தன் மகனுக்காக, தகப்பனே முன் வந்து மன்னிப்பு கேட்பதும் அதற்கான அபராத தொகையை தானே செலுத்தி மகனை விடுவிப்பது போல, நம்முடைய அன்பின் ஆண்டவர் பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்து பிள்ளையாகிய நமக்காக சிலுவையில் ரத்தம் சிந்தி பாவத்தின் தண்டனையிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறார். ஆகவே அவர் தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களை சுமந்தார். (மத்: 8: 17) (நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா: 53: 5)

ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்ற பைபிள் வார்த்தையின்படி (எபி: 9: 22) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து, 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததினால் நமக்கு சமாதானம், சந்தோஷம், பாவத்தில் இருந்து விடுதலை, தெய்வீக பாதுகாப்பு, பரிபூரண ஆசீர்வாதம், நிறைவான, பரலோக வாழ்வு கிடைத்திருக்கிறது. ஆகவே அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் மரணம் நமக்கு மகிழ்ச்சியே!

கர்த்தகர் உங்களை ஆசிர்வதிப்பாராக...

பாஸ்டர் எஸ்.வேதமுத்து,

சர்வ வல்லவர் சர்வதேச சபை

பெரியார் காலனி, திருப்பூர்.
Tags:    

Similar News