ஆன்மிகம்
இயேசு

மனதை ஈடுபடுத்துவோம்

Published On 2020-05-06 09:35 IST   |   Update On 2020-05-06 09:35:00 IST
கர்த்தர் நமக்கு தந்த வேதாகம சத்தியங்களின் வழியாகவே, அனுதின வாழ்க்கையில் நமக்கு தம்முடைய வழிநடத்துதல்களையும், தம்மை குறித்த வெளிப்பாடுகளையும் தருகிறார் என்பதை நாம் அறிய வேண்டும்.
“கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”

(சங்கீதம் 1:2)

ஓவியக்கண்காட்சி நடக்கும் போது பலர் அதனை பார்க்க வருவார்கள். அவர்களில் சிலர் நடந்து கொண்டே மேலோட்டமாக ஓவியங்களை பார்த்து விட்டு கடந்து போய் விடுவார்கள். ஆனால் சிலர் அப்படியல்ல. ஒவ்வொரு ஓவியத்தையும் நன்கு கவனித்து பார்ப்பார்கள். அந்த ஓவியத்தை வரைந்தவனுடைய கலைத்திறன், கற்பனை வளம், சொல்ல வந்த கருத்து, நிறங்களை கையாண்டிருக்கிற விதம் ஆகியவற்றை ரசித்து பார்ப்பார்கள். அங்கே அவர்கள் ஓவியங்களில் தங்கள் மனதை ஈடுபடுத்தி மகிழ்வார்கள்.

அதுபோலவே வேத புத்தகம் வாசிப்பிலும் நாம் பொறுமையாக மனதை ஈடுபடுத்தி, தியானித்தால் தான் அதிலிருந்து நாம் நிறைவான மகிழ்ச்சியையும், ஆவிக்குரிய புத்துணர்வையும் பெற முடியும். நாம் எத்தனை அத்தியாயங்கள் தினமும் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எத்தனை முறை முழு வேதாகமத்தையும் படித்து முடித்துவிட்டோம் என்பதும் அல்ல. எந்த அளவிற்கு நாம் வேதாகமத்தின் செய்திகளில் நம்மை ஈடுபடுத்தி, அதிலிருந்து வெளிப்படும் உண்மைகளை அறிந்து கொள்கிறோம் என்பதே முக்கியமாகும்.

ஏதோ ஒரு பக்திக்காகவோ, கடமைக்காகவோ வேதத்தை படிப்பதில் பலன் ஒன்றும் இல்லை. சில அத்தியாயங்களை படித்து விட்டால், ஒருவேளை நாம் மனசாட்சியில் ஒரு திருப்தியை பெற்றுவிட முடியும். ஆனால் அது போதாது. நாம் எவைகளை அதன் மூலம் அறிகின்றோம்? அதனால் நாம் வாழ்க்கையில் காணும் பிரதிபலிப்புகள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு திருப்தியான விடை வேண்டும். அந்த தாகம் பெருகினால்தான் வேதம் நமக்கு விளங்க தொடங்கும்.

கர்த்தர் நமக்கு தந்த வேதாகம சத்தியங்களின் வழியாகவே, அனுதின வாழ்க்கையில் நமக்கு தம்முடைய வழிநடத்துதல்களையும், தம்மை குறித்த வெளிப்பாடுகளையும் தருகிறார் என்பதை நாம் அறிய வேண்டும். மற்றபடி மந்திரம் படிப்பது போல படிப்பதால் எந்த பயனும் இல்லை.

“வேதாகமத்தை வாசிக்கின்றவன் பக்திமானாகலாம், வேதத்தை நேசிக்கிறவன் தான் பரிசுத்தவானாகிறான்”.

- சாம்சன் பால்.

Similar News