ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: ஆத்தும தாகம்

Published On 2020-04-08 04:13 GMT   |   Update On 2020-04-08 04:13 GMT
இயேசுவானவர் நம்முடைய ஆத்துமாவை தேவனுக்கு ஏற்றதாய் மாற்ற அவர் நம்மீது தாகமாய் இருக்கிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு உடலில் சிறிது காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்த ஆரம்பித்தால் நாம் முதலில் செய்வது தண்ணீர் கொடுப்பது. ஏன் என்றால் தண்ணீர் குடித்தால் உடம்பில் இருந்து வெளியில் வரும் ரத்தம் நின்று விடும். உடல் சோர்வடையாது என்பதற்காகத்தான். ஆனால் இயேசுவோ சிலுவையில் ரத்தம் சிந்திக் கொண்டிருந்த போது நம்முடைய உயிர் நம்மை விட்டு பிரிய போகிற வேளையில், 5-வது வார்த்தையாக தாகமாயிருக்கிறேன் என்று கூறுகிறார்.

இப்படி இயேசுவானவர் தாகமாய் இருக்கிறேன் என்று கூறியது எதற்காக என்று நாம் தியானித்து பார்க்க வேண்டும். பிதாவானவர் இயேசுவை இந்த உலகத்தில் அனுப்பினதின் நோக்கம் இந்த உலகத்தில் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனங்களின் ஆத்துமாக்களை தன்வசம் ஆதாயப்படுத்திக் கொள்ளவே அனுப்பினார். எனவே தான் இந்த உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே என்று இயேசுவை குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே தான் இந்த உலகத்தின் மொத்த பாவத்திற்காகவும் சிலுவையில் அறையப்பட்டிருந்த போதும், இந்த மக்கள் இன்னும் பாவம் செய்து கொண்டிருக்கிறார்களே, என்று நினைத்து இன்னும் அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டும் என்று அவர் சொன்ன வார்த்தைதான் தாகமாய் இருக்கிறேன். எனவே இயேசுவானவர் நம்முடைய ஆத்துமாவை தேவனுக்கு ஏற்றதாய் மாற்ற அவர் நம்மீது தாகமாய் இருக்கிறார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படியாக பிதாவானவர் என்னவெல்லாம் தீர்க்கதரிசனங்களை கொண்டு சொன்னாரோ, அதை எல்லாம் இயேசு இந்த உலகத்திலே நிறைவேற்றி விட்ட திருப்தியில் ‘முடிந்தது’ என்று சிலுவையிலே 6-ம் வார்த்தையாக சொல்கிறார்.

முடிந்தது என்றால், நம்முடைய வாழ்க்கையில் பிறந்தது முதல் பேரன், பேத்திகள் என்று பார்த்த பிறகு, எனக்கென்ன எல்லாம் பார்த்து முடிந்தது இனி எனக்கென்ன கவலை என்று நிம்மதி பெருமூச்சு விடும் பெரியோர்களை நாம் பார்க்க முடியும். இதே போல தான் இயேசுவும் இந்த உலகத்தில் என்ன நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை பல்வேறு பாடுகளுக்கு மத்தியிலும் அதை நிறைவேற்றி விட்ட திருப்தியில் பிதாவிடம் தன்னை குறித்து சொன்ன வார்த்தை இந்த உலகத்தில் நான் ஆவிக்குறிய ஓட்டத்தை முடித்து விட்டேன் என்று சொல்வதே முடிந்தது என்பது ஆகும்.

எனவே நாமும் இந்த உலகத்தில் பிறந்தது முதல் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இயேசு இந்த உலகத்தில் வந்த நோக்கத்தை நிறைவேற்றி கடைசியாக சிலுவையிலே தன் வெற்றியை முடித்தது போல நாமும் அவர் நமக்காகத்தான் இவ்வளவு பாடுகளை அனுபவித்துள்ளார் என்பதை உணர்ந்து அவருக்கு கீழ்படிதல் உள்ள பிள்ளைகளாக வாழ முற்படுவோம் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.

சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.

Tags:    

Similar News