ஆன்மிகம்
இயேசு

மெய்யான ஆறுதல்-ஜெபம்

Published On 2020-04-07 04:14 GMT   |   Update On 2020-04-07 04:14 GMT
தேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த ஜெபம் யாரிடம் போய் சேர வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
பொதுவாக வயதானவர்கள் தங்கள் மரண படுக்கையில் படுத்திருந்தால் தன் பிள்ளைகளை அழைத்து எல்லோரும் நல்லா இருங்கள் என்னை பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொல்வது வழக்கம். இது போல் தான் இயேசுவும் சிலுவையில் ஆணிகளில் அறையப்பட்ட நிலையில், சிலுவையின் அருகில் நின்றிருந்த தன்னுடைய தாயையும், அருகே நின்ற அவருக்கு அன்பாய் இருந்த சீஷனையும் பார்த்து, தன் தாயை நோக்கி, ‘ஸ்திரியே அதோ உன் மகன் என்றார். பின்பு அந்த சீஷனை பார்த்து அதோ உன் தாய் என்றார். அந்நேரம் முதல் அந்த சீஷன் இயேசுவின் தாயை தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். இதுதான் இயேசு சிலுவையில் சொன்ன மூன்றாவது வார்த்தையாகும். இந்த வார்த்தையை கேட்டவுடன் இயேசுவின் தாய் மெய்யான ஆறுதலாய் இருந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த 3-ம் வார்த்தையை இயேசு சிலுவையிலே சொல்லி முடித்து விட்டு தன் ஜீவன் தன்னை விட்டு போகப்போகிறதே என்று அறிந்து, பிதாவை நோக்கி, ‘ஏலீ, ஏலீ லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமாய் கூப்பிடுகிறார். அதற்கு என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று அர்த்தமாகும். இதுதான் அவர் சிலுவையில் சொன்ன 4-வது வார்த்தையாகும். இப்படி இயேசு சிலுவையிலே சொன்ன இந்த வார்த்தை நமக்கு எதை கற்றுக்கொடுக்கிறது என்று நாம் சற்று சிந்தித்து பார்ப்போம்.

இயேசுவோ சிலுவையில் அறையப்பட்டிருந்த போது, ஒரு பக்கம் பாவத்தின் நிமித்தம் அழிந்து கொண்டிருந்த ஜனங்கள், மற்றொரு பக்கம் தான் தேவனாய் இருந்த போதும் சிலுவையிலே ஆணிகளால் அறையப்பட்டு ரத்தம் சிந்தி மாமிச வேதனை அடைந்திருந்த போதும் அவர் யாரையும் கடிந்து கொள்ளவும் இல்லை, பிதாவானவர் தான் தன்னை இந்த துன்பத்திற்கு ஆளாக்கினவர். எனவே அவர்தான் நம்முடைய வேதனைகளுக்கெல்லாம் பதில் தர முடியும் என்று எண்ணியதால் தான் மிகுந்த மன உருக்கத்துடன் பிதாவை நோக்கி மனமுருகி என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று மிகுந்த சத்தமாய் கூப்பிடுகிறார்.

ஆம் தேவ பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும். அந்த ஜெபம் யாரிடம் போய் சேர வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இயேசு கல்வாரி சிலுவையிலே தன் உயிர் பிரியும் போது கூட அவர் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல் தன் பிதாவை நோக்கி கூப்பிடுகிறார். அதை போல நாமும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து நமக்கு துன்பம் வரும் பேதெல்லாம் அவரை நோக்கி ஜெபம் செய்வோம், விடுதலையை பெற்றுக்கொள்வோம் ஆமென்.

சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.

Tags:    

Similar News