ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: தேவ கட்டளை

Published On 2020-04-03 04:52 GMT   |   Update On 2020-04-03 04:52 GMT
இந்த தவக்காலத்தில் அவர் நமக்காக பட்ட பாடுகளை எண்ணி, அவர் கொடுத்த 10 கட்டளைகளுக்கு கீழ்படிந்து தேவனுக்கு பிரியமானவர்களாக வாழ முற்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கர்த்தர் மோசேயை அழைத்து இஸ்ரவேல் ஜனங்கள் 3 நாட்கள் தங்களை பரிசுத்தப்படுத்தி 3-வது நாளின் விடியற்காலையில் 3 மணிக்கு இடி முழக்கங்களும், மின்னல்களும், எக்காள சத்தங்களும் கேட்கும்போது சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்து நிற்கவேண்டும். சீனாய் மலையை யார் தொட்டாலும் இறந்து போவார்கள் என்று எச்சரித்தார்.

எனவே இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு சீனாய் மலையின் அடிவாரத்தில் வந்தார்கள். விடியற்காலையில் கர்த்தர் சீனாய் மலையின் மேல் அக்னியில் இறங்கினார். கர்த்தர் அங்கு வந்த போது மலை முழுவதும் மிகவும் அதிர்ந்து அசைந்தது. மலையிலிருந்து வானளவு அக்னி எரிந்துகொண்டிருந்தது. அக்னியின் நடுவிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தோடு கர்த்தர் பேசினார். அவர் சத்தத்தை கேட்டார்கள். ஆனால் அவர் ரூபத்தை யாரும் பார்க்கவில்லை. அக்னியிலிருந்து அவர் பேசினார்.

அப்போது,

1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

2. யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.

3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

4. ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

5. உன் தகப்பனையும், உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

6. கொலை செய்யாதிருப்பாயாக.

7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.

8. களவு செய்யாதிருப்பாயாக.

9. பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

இப்படி இந்த 10 கட்டளைகளையும் கைக்கொண்டு அதன்படி கீழ்படிய வேண்டும் என்று கட்டளையிட்டார். வேதத்தில் உபாகமம் 4-ம் அதிகாரம் 36-ம் வசனத்தில், ‘உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்னியை உனக்குக் காண்பித்தார். அக்னியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்‘ என்று கூறப்பட்டுள்ளது.

எனவே நாமும் இந்த தவக்காலத்தில் அவர் நமக்காக பட்ட பாடுகளை எண்ணி, அவர் கொடுத்த 10 கட்டளைகளுக்கு கீழ்படிந்து தேவனுக்கு பிரியமானவர்களாக வாழ முற்படுவோம். தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.

சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
Tags:    

Similar News