ஆன்மிகம்
இயேசு

தவக்கால சிந்தனை: பாதுகாப்பு

Published On 2020-04-02 04:49 GMT   |   Update On 2020-04-02 04:49 GMT
சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.
உலகத்தில் இன்று அநேக பாதுகாப்பு மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு பெற்றோரின் பாதுகாப்பு. மனிதர்களுக்கு காவல்துறையால் பாதுகாப்பு. நமது நாட்டிற்கு ராணுவத்தால் பாதுகாப்பு இப்படி பாதுகாப்பு என்பது பல்வேறு வகையில் உள்ளது. ஆனால் சர்வ வல்லமையுள்ள உன்னதமான இயேசுவை தமது ஜீவனாக தேடுகிறவர்களுக்கும், முழு இருதயத்தோடு தேவசமூகத்தில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் இறைவன் கொடுக்கும் பாதுகாப்பு வித்தியாசமானது.

தேவன் பரலோகத்தில் உன்னதங்களில் இருக்கிறார். நாம் பார்க்கிற நட்சத்திரங்களின் உயரம் எவ்வளவு உயரமாயிருக்கிறது. அதைவிட உயரத்தில் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். உன்னதத்தில் இருந்துகொண்டு தமது அக்னி ஜுவாலை போன்ற கண்களால் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் பார்க்கிறார். நாம் அவரை காண முடியாது, அவர் நம்மை காண்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசி தரிசனத்தை கண்டார். இதைத்தான் ஏசாயா 6-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில், ‘ஆண்டவர், உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்” என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ஏசாயா 33-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், ‘கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. நம்மை பாதுகாக்கிற சர்வலோக தேவன் பரலோக உன்னதத்தில் வாசமாயிருக்கிறார். அவர் உறங்குவதில்லை. உன்னதமானவர், நமக்கு அடைக்கலமானவர். ஆபத்துக் காலத்தில் நமக்கு பாதுகாவலராக இருக்கிறார். கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். உன் வழிகளிலெல்லாம் உன்னை காக்கும்படி தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார்.

ஆம் தேவ பிள்ளைகளே, இந்த நேரத்தில் நாம் எந்தவிதமான கொள்ளை நோயை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை உன்னதத்தில் வாசமாய் இருக்கிற தேவன் நம்மை காக்க வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எனவே இந்த தவக்காலத்தில் அவரை நோக்கி நம்மை பாதுகாத்து வழிநடத்த வேண்டிக்கொள்வோம்.

சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
Tags:    

Similar News