ஆன்மிகம்
இயேசு

உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்...

Published On 2020-03-13 04:58 GMT   |   Update On 2020-03-13 04:58 GMT
எங்களை நேசிக்க, எங்களோடு பேச, எங்களை புரிந்துகொள்ள, எங்கள் மேல் அன்பு காட்ட ஒருவருமில்லையே என்று புலம்பித் தவிக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் ஓர் நற்செய்தி. ‘இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார், உங்களை கைவிடமாட்டார்’.
இன்றைக்கு பூமியில் வசிக்கும் மாந்தரில் பலர் கைவிடப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக, அனாதைகளாக மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழுகின்றனர்.

அவர்களுடைய இதயத்தில் எனக்கு யாரும் இல்லையே என்கிற வேதனை நிரம்பி காணப்படுகிறது. தாங்கள் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே தங்களை நேசிக்கவில்லையே என்று புலம்பித் தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம் உண்டு. தங்களின் சொந்த தாய், தந்தையரால் துரத்தியடிக்கப்பட்ட பிள்ளைகளும் உண்டு, ஏன் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பிள்ளையை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்த கொடூரமான தாய்களும் உண்டு.

சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், சொந்த பந்தங்களுக்கிடையே புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டே போகலாம். ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் கைவிடப்பட்டவரை போல ஒரு வாழ்க்கை வாழ்கிறீர்களா?, கவலைப்படாதிருங்கள்.

இன்றைக்கு உண்மையான அன்பிற்கு ஏங்கி தவிக்கும் எத்தனையோ உள்ளங்கள் காணப்படுகின்றன. கணவனின் நேசத்துக்காக ஏங்கும் மனைவிகள், மனைவியின் அன்பிற்காக ஏங்கி தவிக்கும் கணவன்மார்கள், பிள்ளைகளின் பாச வார்த்தைகளுக்காய் காத்திருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் தங்களிடம் அன்பாக நடக்க மாட்டார்களா என்று ஏங்கும் பிள்ளைகள் என்று பலதரப்பட்டோர் உண்டு.

இன்று முகநூலையும், வாட்ஸ்அப்பையும் நேசிக்கும் அளவுக்கு கூட உறவுகளை நாம் நேசிக்க தவறிவிட்டோம். கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் செலவழிக்கும் நேரத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தங்கள் குடும்பங்களை, உறவுகளை நேசிப்பாரேயாகில் அநேக குடும்பங்களில் வழியும் கண்ணீர் குறைந்திருக்கும்.

இன்றைய காலகட்டங்களில் மனிதன் உறவுகளோடு இயங்குவதை காட்டிலும் இயந்திரங்களோடு இயங்குவதே அதிகம். செல்லப்பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பதைக் காட்டிலும் செல்போன்களோடு நேரம் செல வழிப்பதே அதிகம். முதியோர்களோடு தங்கள் பெற்றோரோடு நேரம் செலவிடாத எத்தனையோ பேர்கள் முகநூல்களில் முடங்கி கிடக்கின்றனர். வாழ்க்கையை வாழ வேண்டியவர்களோடு வாழாமல் வாட்சப்பில் வாழ்பவர்கள் அதிகம். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம்.

இப்படி ஏதோ ஒரு விதத்தில் வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு கண்ணீர் வடிக்கும் மனிதர் களுக்கு ஆறுதலாக, தேறுதலாக, கைவிடாதவராக இருக்கும் தெய்வம் தான் இயேசு கிறிஸ்து. அவர் தம் அருளுரையில் இப்படியாக திருவுளம் பற்றினார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. (மத்தேயு 11:28).

ஆம், ஒவ்வொருவருக்கும் ஆறுதலையும், சமாதானத்தையும், நம்பிக்கையையும் அளிக்கவே இறைமகன் இயேசு பூமியில் வெளிப்பட்டார். அவரை நோக்கி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர் நன்மை செய்து ஆசீர்வதிப்பது நிச்சயம். அவர் தம்மை பின்பற்றி வந்த சீடர்களுக்கு இப்படியாக திருவுளம் பற்றினார்:

‘நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்’ என்று மட்டுமல்ல, ‘நான் உங்களை கைவிடுவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை, உலகத்தின் முடிவு பரியந்தம் இதோ சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்று திருவுளம்பற்றினார்.

‘ஆம், அவர் தம் ஜனங்களை நேசிக்கிறவர். தம் ஜனங்களின் மேல் அதிக கரிசனையுள்ளவர். ஆகவே தான் ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக் கிறேன்’ (ஏசாயா 49:15,16) என்று திருவுளம் பற்றினார்.

ஆம், உங்களை நேசிக்கிற ஒரு தெய்வம் உண்டு, அவர் தான் அருள் நாதர் இயேசு. அவர் உங்கள் ஒவ்வொருவருக்காய் கல்வாரி சிலுவையில் தியாகமாய் பலியானார். உலக மக்களின் பாவங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தார். அவரை நம்பும், தேடும் ஒவ்வொரு மனிதருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கட்டளையிட்டு வாழத் தேவையான அவ்வளவு அனுகிரகங்களையும் கொடுத்து, முடிவிலே நித்திய ஜீவனையும் பரலோக வாழ்க்கையும் கட்டளையிடுகிறார்.

இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இயந்திரங்களோடு ஜீவிக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு ஜீவித்தால் நலமாயிருக்கும். முக நூல்களில் மூழ்கிகிடக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் நூல்களில் மூழ்கினால் நலமாயிருக்கும். செல்போன்களில் வீழ்ந்துகிடக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு செயல்பட்டு வாழ்ந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நாம் உறவுகளை நேசிப்போம்.

எங்களை நேசிக்க, எங்களோடு பேச, எங்களை புரிந்துகொள்ள, எங்கள் மேல் அன்பு காட்ட ஒருவருமில்லையே என்று புலம்பித் தவிக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் ஓர் நற்செய்தி. ‘இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார், உங்களை கைவிடமாட்டார்’.

இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் உறவுகளோடு நேரம் செல விடுங்கள். அன்பு வார்த்தைக்காய் ஏங்கி தவிக்கும் ஒவ்வொருவருடனும் நேரம் செலவிடுங்கள். அப்பொழுது உங்கள் குடும்பம் ஒரு சொர்க்க வீடாக திகழும். மனமகிழ்ச்சி உங்கள் உள்ளங்களில் பெருகும் போது மனஅழுத்தம் விலகி சரீரத்தில் ஆரோக்கியம் பெருகும்.

இறைவனின் திருவருளால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். உங்களால் மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆம் கைவிடாத தெய்வம் உங்களை கைவிடாமல் பரலோகத்தின் மகிமையால் உங்களை ஆசீர்வதிப்பார்.

சகோ சி.சதீஷ், டைனமிக் பவர் மினிஸ்ட்ரி, வால்பாறை.
Tags:    

Similar News