ஆன்மிகம்
பேதுரு

பைபிள் கூறும் வரலாறு: பேதுரு முதல் நூல்

Published On 2020-03-10 04:18 GMT   |   Update On 2020-03-10 04:18 GMT
இயேசுவுடன் வாழ்ந்த பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் தான் பேதுரு. இன்றைய வட மேற்கு துருக்கி பகுதியில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கும், பிற இனக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானதாக இந்த நூலை அவர் எழுதினார்.
இயேசுவுடன் வாழ்ந்த பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் தான் பேதுரு. கி.பி. 64-ம் ஆண்டு, சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டார். அன்றைக்கு சின்ன ஆசியா என அழைக்கப்பட்ட, இன்றைய வட மேற்கு துருக்கி பகுதியில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கும், பிற இனக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானதாக இந்த நூலை அவர் எழுதினார்.

இந்த நூலின் தொடக்கத்திலேயே ‘இயேசு கிறிஸ்துவின் திருத்தூதன் பேதுரு எழுதுவது’ என தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனாலும், அவர் குறிப்பிடும் “போந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா” போன்ற எல்லா இடங்களிலும் பேதுருவின் காலத்தில் திருச்சபை தோன்றியிருக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். எனவே இந்த நூலை பேதுரு நேரடியாக எழுதாமல் அவர் பெயரில் ஒருவர் எழுதியிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

துன்பங்களினால் அலைக்கழிக்கப்படும் போது எப்படி விசுவாசத்தைக் காத்துக் கொள்வது, இழந்து போன நம்பிக்கையை எப்படி மீண்டெடுப்பது எனும் சிந்தனைகளின் அடிப்படையில் இந்த நூல் அமைந்துள்ளது.

பேதுரு வாழ்ந்த காலத்தில் பெரிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராய் வன்முறை கட்டவிழ்த்து விடப்படவில்லை. எனில் ஏன் இந்த நூல் எழுதப்பட்டது? அதற்கு ஒரு வரலாற்று, மதவாதப் பின்னணி உண்டு.

கி.பி. 64-ல் ரோம் நகரில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து நடந்தது. மூன்று நாட்கள் கொழுந்துவிட்டெரிந்து நகரையே துவம்சம் செய்த நெருப்பு அது. அந்த நெருப்பு நகரிலுள்ள கோவில்கள், பழைய கட்டிடங்கள் போன்றவற்றையெல்லாம் எரித்து சாம்பலாக்கின. இந்தச் சதிவேலைக்குப் பின்னால் இருந்தவர் நீரோ மன்னன்.

ஆனால் அவன் சூழ்ச்சியாக கிறிஸ்தவர்களை நோக்கிக் கைகாட்டினான். இதனால் அவனுக்கு இரட்டை லாபம். அவனுடைய சிந்தனைப்படி நகரை புதிதாய்க் கட்டி எழுப்பலாம். இரண்டாவது அவனுடைய எதிரிகளான கிறிஸ்தவர்களை அழித்தொழிக்கலாம்.

மக்களின் கடும் கோபம் கிறிஸ்தவர்கள் மீது திரும்பியது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். சிங்கம், புலி போன்ற விலங்கு களுக்கு இடையே வீசப்பட்டு கொல்லப்பட்டனர். மேனியெங்கும் எண்ணெய் பூசப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர்.

இந்த கடிதத்தின் காலம் அந்தக் காலகட்டமாக இருக்கலாம். அந்த கொடுமைகளின் உள்ளே பயணிக்கும் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த நூல் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மார்க் நற்செய்தியாளருக்கு பெரும்பாலான தகவலைக் கொடுத்தவர் பேதுரு தான். திருத்தூதர் பணிகளிலும் முதல் பாதியை ஆக்கிரமித்திருப்பவர் அவர் தான்.

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது நமது கஷ்டங்களெல்லாம் தீர்ந்து விடும் என்பது தவறான போதனை. உண்மையில் அப்போது தான் நமது கஷ்டங்களெல்லாம் ஆரம்பிக்கும். நிராகரிப்புகள் எழும். துரத்தல்கள் எழும். நாம் வேண்டப்படாதவர்கள் ஆவோம். ஆனால் எல்லா வற்றுக்கும் மேலே, இயேசு இருக்கிறார் எனும் தணியாத ஆனந்தமே நம் பலம். இதையே இயேசுவும் போதித்தார்.

பேதுரு முதலாம் நூலிலும் இதே சிந்தனையை பேதுரு பிரதி பலிக்கிறார். அவரது நூல் துயரங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பேசவில்லை. எப்படி பொறுமையாய் அந்தத் துயரங்களின் வழியே பயணிப்பது என்பதைப் பேசுகிறது. அந்தத் துயரமானது நமது தவறுகளுக்கான தண்டனையாய் இல்லாமல், இயேசுவுக்காய் ஏற்பதாய் இருக்க வேண்டியது முக்கியம். அந்த துயரங்களுக்குப் பழிவாங்கும் சிந்தனை நம்மிடம் எழாமல் இருக்க வேண்டும்.

மீட்பு என்பது தனிநபராகவும் வரும், குடும்பமாகவும் வரும் எனும் சிந்தனையையும் பேதுரு பதிவு செய்கிறார். தனி மனித மீட்பு என்பது இறைவனோடு இணைந்திருப்பதும், அவரது வார்த்தைகளின் படி வாழ்வதும் எனும் அடிப் படையில் அமைகிறது.

எதிர்நோக்கு, விசுவாசம், அன்பு எனும் மூன்று சிந்தனைகளை பேதுரு எழுதுகிறார். எதிர்நோக்கு என்பது மறுவாழ்வில் நாம் கிறிஸ்துவோடு இணைவோம் எனும் எதிர்பார்ப்பு. விசுவாசம் என்பது எப்படி சோதிக்கப்பட்டாலும் நாம் இறைவனை விட்டு விலகாதிருக்கும் உறுதியான பற்று. அன்பு என்பது நமது இயல்பாக மாற வேண்டிய இறைகுணம்.

தனிநபர் மீட்பு தவிர, குட்டித் திருச்சபைகளாக மாற வேண்டிய குடும்பங்களைப் பற்றியும் பேதுரு எழுதுகிறார். அதே போல ஒவ்வொரு மனிதனும் குருவாகிறார் எனும் சிந்தனையையும், அவர்கள் தூய தேசமாக இருக்கிறார்கள் எனவும் பேதுரு குறிப்பிடுகிறார்.

நம்மை ஆளும் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட வேண்டியதன் தேவையையும், கணவன் மனைவியருக்கு இடையேயான புரிதல் அன்பு விசுவாசம் போன்றவையும், இளைஞர்கள் பெரியவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டியதன் தேவையையும் பேதுரு எழுதுகிறார்.

“காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்” (1 பேதுரு 3:19) எனும் வியப்பூட்டும் செய்தியையும், “கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்” எனும் ஆன்மிகத்தின் மையத்தையும் பேதுரு பதிவு செய்கிறார்.

பல ஆன்மிக சிந்தனைகள் அடங்கிய ஒரு முக்கியமான நூல் இது.

சேவியர்
Tags:    

Similar News