ஆன்மிகம்
யாக்கோபு

பைபிள் கூறும் வரலாறு: யாக்கோபு

Published On 2020-03-03 05:05 GMT   |   Update On 2020-03-03 05:05 GMT
‘இந்த நூலை நான் வெறுக்கிறேன். இந்த நூல் அப்போஸ்தலிக்க நூலே கிடையாது. இதெல்லாம் பைபிளில் இருக்க தகுதியே இல்லை’. இப்படி யாக்கோபு நூலின் மீது மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்தவர் மார்டின் லூத்தர்.
‘இந்த நூலை நான் வெறுக்கிறேன். இந்த நூல் அப்போஸ்தலிக்க நூலே கிடையாது. இதெல்லாம் பைபிளில் இருக்க தகுதியே இல்லை’. இப்படி யாக்கோபு நூலின் மீது மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்தவர் மார்டின் லூத்தர். புராட்டஸ்டன்ட் பிரிவைத் தோன்றுவித்தவர். சொல்லப் போனால் அவர் மொழிபெயர்த்த பைபிளில் இந்த நூலை பைபிளின் கடைசியில் ‘துணை நூல்கள்’ என போட்டு வைத்தார்.

அவருடைய இறையியல் சிந்தனைக்கு ஒத்துப்போகாத நூல்களில் இதுவும் ஒன்று என்பது அதன் காரணம். முக்கியமாக, நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அழுத்தம் இந்த நூலில் இல்லை. ‘கிறிஸ்து’ எனும் பதம் இரண்டே இரண்டு முறை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘விசுவாசம் மட்டுமே மனிதனை மீட்க முடியும்’ எனும் அவருடைய அறைகூவலின் அடிப்படைக்கே இந்த நூல் எதிராக இருக்கிறது.

நல்ல வேளை மார்ட்டின் லூத்தர் இந்த நூலை விவிலியத்தில்இருந்து நீக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், கிறிஸ்துவின் தன்மைகளில் ஒரு பாகம் புரியப் படாமலேயே போயிருக்கும்.

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த நூலில்?

“செயல்படாத விசுவாசம் செத்த விசுவாசம்”, “செயலற்ற நம்பிக்கை பயனற்றது” என்கிறது இந்த நூல்.

இது ஒன்றும் புதிய சிந்தனையல்ல, “என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்பவரெல்லாம் விண்ணரசில் சேர்வதில்லை, தந்தையின் விருப்பப்படி செயல்படுபவரே சேர்வார்” என இயேசு கூறியதன் விளக்கமே.

தனது வாதத்துக்கு வலு சேர்க்க, யாக்கோபு இரண்டு பழைய ஏற்பாட்டு நபர்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்த ஆபிரகாம். இன்னொன்று மோசமான வாழ்க்கை வாழ்ந்து வந்த இராகாபு.

ஆபிரகாம் ஒரு உயிரை எடுக்கத் துணிந்தவர். இராகாபு இரு உயிர்களை காப்பாற்றத் துணிந்தவர். இருவருமே விசுவாசத்தைச் செயல்களில் காட்டினார்கள். அப்படி செயல்களால் காட்டியதால் தான் இருவருமே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள். எனவே “உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே” என்கிறார் அவர்.

வெறும் செயல்கள் கொண்டிருப்பதால் மீட்பு கிடைப்பதில்லை. வெறும் விசுவாசம் கொண்டிருப்பதும் மீட்பைத் தருவதில்லை. விசுவாசத்தின் வெளிப்பாடாய் செயல்கள் அமையும் போது மீட்பு நிச்சயம் கிடைக்கும் என்பதே யாக்கோபு நூலின் அடிப்படைச் செய்தி.

இந்த நூலை எழுதிய யாக்கோபு யார் என்பதிலும் குழப்பங்கள் உண்டு. மரபுச் செய்திகளின் படி யாக்கோபு என்பவர் இறைமகன் இயேசுவின் சகோதரர். எருசலேம் திருச்சபையின் தலைவராக இருந்தவர். பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர். எனினும் இவர் இயேசுவின் சகோதரர் அல்ல, வேறு ஒரு யாக்கோபு என சில இறையியலாளர் கருதுகின்றனர். அதற்கு அவர்கள் தரும் காரணங்களில், இயேசுவுடனான உறவைப் பற்றிய பகிர்தல் இல்லாதது, கடிதத்தின் நடை கிரேக்க எபிரேய கலவையாய் இருப்பது போன்றவை முக்கியமானவை.

இயேசுவுக்கு நேரடிச் சகோதரர்கள் இருந்தார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. அன்னை மரியாள் இறுதி வரை கன்னியாகவே இருந்தார். விவிலியம் குறிப்பிடும் இயேசுவின் சகோதரர்கள் எல்லோருமே அவருடைய உறவினர் தான் என்பது கத்தோலிக்கர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கான இறையியல் ஆய்வுகளையும் அவர்கள் கணிசமாக வைத் திருக்கிறார்கள்.

இது இயேசுவின் சகோதரர் யாக்கோபு சொன்னவற்றை அடிப்படையாய்க் கொண்டு, புலமை வாய்ந்த ஒருவர் எழுதிய நூல் என சிலர் பொத்தாம் பொதுவாக முடிவுக்கு வருகின்றனர். ஒரு வகையில் பழைய ஏற்பாட்டின் நீதி மொழிகள் நூலைப் போன்ற ஒரு கட்டமைப்பு இந்த நூலில் காணக்கிடைக்கிறது. இதன் காலம் கி.பி. 50-க்கும் நூறுக்கும் இடைப்பட்டது என்பது தோராயக் கணக்கு.

யாக்கோபு நூலின் ஆசிரியர் சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடு கிறார். செல்வத்தின் மீதான ஆசை தீயது. செல்வர்கள் வெயிலில் அழியும் புல்லைப் போல அழிவார்கள். அவர்களுக்கு இழி நிலை வரும். செல்வத்தைச் சேர்த்து வைக்காமல், ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது ஒரு சிந்தனை.

உலகத்தோடான ஆசையும், பற்றும் விசுவாச வாழ்வுக்கு எதிரானது. செருக்கு, பேராசை சிற்றின்பத் தேடல் இவற்றையெல்லாம் விட்டு விட்டு தாழ்மையுடன் இறைவனை அணுக வேண்டும் என்பது இன்னொரு சிந்தனை.

நாவடக்கம் மிக முக்கியமானது. நாவி லிருந்து நல்லவையும், அல்லவையும் வரக் கூடாது. ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரப்பதில்லை. நாவு காட்டுத் தீயைப் போன்றது. உடல் முழுவதையும் கறைபடுத்துவது. அதை அடக்குவது எளிதல்ல, ஆனால் அதை வெற்றி கொள்ள வேண்டும் என்பது பிறிதொரு சிந்தனை.

இயேசு இறுதித் தீர்வை நாளில் ‘என் மீது விசுவாசம் கொண்டிருந்தாயா?’ என கேட்கவில்லை. ஏழைகளில் என்னைக் கண்டாயா? என்றே கேட்டார். ஏழை களுக்கு உதவியதன் மூலம் எனக்கு உதவினாயா? என்பதையே கேட்பார். இந்த யாக்கோபு நூல், அந்த நிகழ்வுக்காக நம்மை தயாராக்குகிறது.

சேவியர்
Tags:    

Similar News