ஆன்மிகம்
இயேசு

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

Published On 2020-02-26 02:58 GMT   |   Update On 2020-02-26 02:58 GMT
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள், இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூறும் விதமாக 40 நாட்களுக்கு மேலாக நோன்பிருப்பது வழக்கம். இந்த நோன்பு காலத்தை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று அழைக்கிறார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நாளை ஆகும். இந்த நாளில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அன்றைய தினம் கடந்த ஆண்டில் குருத்தோலை தினத்தன்று வழங்கப்பட்ட குருத்தோலைகள் அனைத்தையும் சேகரித்து, எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை, நாளை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையின்போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகளால் சிலுவை அடையாளமிடுவது வழக்கம்.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நாளை காலை நடைபெறும் சாம்பல் புதன் பிரார்த்தனையில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார். இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

இந்த தினத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடங்குகிறார்கள். இந்த ஆண்டு 46 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கிறார்கள். தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஜெபிப்பார்கள். பெரும்பாலானோர் அசைவ உணவுகளையும் தவிர்ப்பார்கள். தவக்காலத்தில் பிரிக்கப்படும் காணிக்கைகள் ஏழை, எளியவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். மேலும் இந்த நாட்களில் ஏழை, எளியவர்களுக்கு தான, தர்மங்களையும் கிறிஸ்தவர்கள் மேற்கொள்வார்கள். தவக்காலத்தில் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. வெள்ளிக்கிழமைதோறும் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகளை நடத்தி ஜெபிப்பார்கள்.

தவக்காலத்தின் இறுதி வாரத்தில் பெரிய வியாழக்கிழமை (ஏப்ரல் 9-ந் தேதி) அன்று இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவியதின் நினைவாக ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளிக்கிழமையில் (ஏப்ரல் 10-ந் தேதி) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் விதமாக மும்மணி ஆராதனை, சிலுவைப்பாடு ஆராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்ரல் 12-ந் தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
Tags:    

Similar News