ஆன்மிகம்
திமொத்தேயு இரண்டாம் நூல்

பைபிள் வரலாறு: திமொத்தேயு இரண்டாம் நூல்

Published On 2020-02-04 04:46 GMT   |   Update On 2020-02-04 04:46 GMT
இந்த நூல் இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிக முக்கியமான பல படிப்பினைகளைத் தருகிறது. முக்கியமான மூன்று சிந்தனைகளாக, வலிகளின் வேளைகளிலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
திருத்தூதர் பவுலின் வாழ்க்கையின் கடைசி கட்டம். மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த முறை சிறை அனுபவம் அவருக்கு மிகக் கடுமையாக இருக்கிறது. அவரை சாதாரண குற்றவாளியாக நடத்துகிறார்கள்.

பல்வேறு இன்னல்கள், துன்பங்கள், வலிகளுக்கு மத்தியிலும் அவருக்கு திருச்சபை மீதான தாகம் சற்றும் குறையவில்லை. திமொத்தேயுவுக்கு இரண்டாவதாய் ஒரு மடல் எழுதுகிறார். இந்த மடல் கி.பி. 67 -ல் எழுதப்பட்டதாய் நம்பப்படுகிறது.

பவுல் தனது வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்டு பல அறிவுரைகளை இளையவரான திமொத்தேயுவுக்கு வழங்குகிறார்.

இந்த மடலின் மிக முக்கியமான மூன்று வார்த்தைகளைக் குறிப்பிட வேண்டுமெனில், ‘பாடுகள்-உண்மை-புனிதம்’ என சொல்லலாம். பாடுகளின் மத்தியிலும் எப்படி விசுவாசத்தையும், உண்மையையும் பற்றிக் கொள்வது?, எப்படி புனிதத்தின் பாதையில் நடைபோடுவது என்பதைப் பவுல் விளக்குகிறார்.

எந்த வசதியும் இல்லாத கடினமான சூழலில் அவர் இருந்தார் என்பதை, “நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா” எனும் வரிகள் விளக்குகின்றன.

ஒரு போர்வை கூட இல்லாத சூழலில் குளிர்காலத்தை சந்திக்க இருந்தார் அவர்.

“குளிர் காலத்திற்குமுன் வர முழு முயற்சி செய்” எனும் அவரது வரிகளில் அந்த வலி புலப்படுகிறது. அந்த சூழலிலும் கூட இறைவார்த்தையை பரப்பவேண்டும் எனும் அவரது தீவிரம் வியக்க வைக்கிறது.

இறுதி நாட்களில் கொடிய காலங்கள் வரும் எனவும், “தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வு அற்றோர், ஒத்துப்போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர், தற்பெருமை பேசுவோர் ஆகியோர் தோன்றுவர்” எனவும் இறுதி நாளுக்கான எச்சரிக்கையை இந்த நூலில் தருகிறார்.

தனது கடிதங்கள் ஒவ்வொன்றிலுமே பவுல் கடவுளின் குணாதிசயங்களை விளக்கத் தவறுவதில்லை. இயேசு எனும் மீட்பரைக் குறித்தும், அவருடைய அன்பு, இரக்கம் குறித்தும் பவுல் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் அவருடைய ‘தீர்ப்பு’ குறித்தும் பவுல் எழுதி ஒரு சமநிலையை உருவாக்குகிறார். அதே போல தூய ஆவியானவரைக் குறித்தும், அவரது ஆற்றலைக் குறித்தும் பவுல் எழுதுகிறார்.

திருச்சபையில் தலைவர்களாக ஆண்களே இருக்க வேண்டும் எனும் சிந்தனை பவுலுக்கு உண்டு. அது அவருடைய ஆயர்பணித் திருமுகங்களான திமொத்தேயு, தீத்து நூல்களில் வெளிப்படுகிறது.

“பவுலுக்கு அப்படிப்பட்ட சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. இந்த நூலை பவுல் எழுதியிருக்க மாட்டார்” என வாதிடும் விவிலிய அறிஞர்களும் உண்டு.

பவுல் தனது சிந்தனையில் தெளிவாக இருக்கிறார். ஆண்களும், பெண்களும் இறைவன் படைப்பில் சமம் என்றாலும், இருவருக்கும் இறைவனின் முன்னிலையில் ஒரே அங்கீகாரம் என்றாலும், பணிகளைப் பொறுத்தவரை வெவ்வேறு.

ஆண்களாகப் பெண்களும், பெண்களாக ஆண்களும் பணி செய்வது இறைவன் உருவாக்கிய சமநிலை அழகை சிதைப்பது என்பது அவருடைய பார்வை.

திருச்சபையில் உலவிய தவறான போதனைகளுக்கு எதிராக சரியான ஆன்மிக விளக்கம் கொடுப்பதை பவுல் தனது கடிதங்களில் தவறாமல் செய்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் திருச்சபையில் உலவிய தவறான போதனைகள் என்னென்ன என்பதைக் குறித்து வேறுபட்ட சிந்தனைகள் உண்டு.

இரண்டாம் நூற்றாண்டில் வலுப்பெற்ற ‘நாஸ்டிசிசம்’ எனப்படும் ஞானக்கொள்கையே அந்த தவறான போதனை என்பது பலருடைய முடிவு.

உதாரணமாக, ‘உடல் என்பது பாவமானது. ஆன்மா என்பது புனிதமானது. எனவே உடலியல் சார்ந்த செயல்கள் எல்லாமே பாவம். புனித வாழ்க்கை வாழவேண்டுமெனில் திருமணம் செய்யக்கூடாது, திருமண உறவில் ஈடுபடக் கூடாது’ என்பது அப்போது பரவியிருந்த ஒரு சிந்தனை. இது கிரேக்க மரபிலிருந்து முளைத்தது.

உணவு என்பது புனிதத்தின் பிரதிபலிப்பு. எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது எனும் பட்டியலைப் பின்பற்றுவது மிக முக்கியம். சில உணவுகள் தீட்டானவை. உணவே நம்மை புனிதமானாகவோ, அசுத்தமானவனாகவோ மாற்றுகிறது என்பது அப்போது பரவியிருந்த இன்னொரு கொள்கை. இது யூத மரபிலிருந்து பெறப்பட்டது. இந்த இரண்டு சித்தாந்தங்களையும் பவுல் தனது விளக்கத்தின் மூலம் எதிர்கொள்கிறார்.

இந்த நூல் இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிக முக்கியமான பல படிப்பினைகளைத் தருகிறது. முக்கியமான மூன்று சிந்தனைகளாக, வலிகளின் வேளைகளிலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். புறத்தூய்மையை விட அகத்தூய்மைக்கே மதிப்பு கொடுக்க வேண்டும். எப்போதும் இறைவனை பற்றிக்கொள்ள வேண்டும். என்பனவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நூலுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. இது தான் திருத்தூதர் பவுல் கடைசியாக எழுதிய திருமுகம்.

சேவியர்
Tags:    

Similar News