ஆன்மிகம்
எப்போதும் இனிமையாக பேசுங்கள்...

எப்போதும் இனிமையாக பேசுங்கள்...

Published On 2020-01-31 04:58 GMT   |   Update On 2020-01-31 04:58 GMT
நாம் பேசுகின்ற இனிமையான வார்த்தைகளே பிறரை உடல் நலம் பெறச் செய்ய இயலும் என்பதை நன்கு அறிந்த ஆண்டவர் இயேசு, கனிவான வார்த்தைகளையே பயன்படுத்தினார்.
ஒருவர் வெகுநாட்களாக கொடியநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, சமயகுரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.

வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்த நோயாளியை பார்த்த சமயகுரு, ‘நாம் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்’ எனக்கூறி மனமுருக அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அனைவரும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு சமயகுரு, ‘இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகிவிடும். இத்தனை பேரும் உங்களுக்காக வேண்டியிருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும்’ எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் ஒருவன் சமயகுரு சொன்னதைக் கேட்டதும் நையாண்டித்தனமாக சிரிக்கத் தொடங்கினான்.

‘வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா?’ எனக்கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமயகுரு, ‘இந்தக் கூட்டத்திலேயே மிகப்பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்’ எனச் சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், ‘நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை அடித்துக் கொன்று விடுவேன்’ என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, ‘முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, இந்தக் கடுமையானச் சொற்கள் உங்களை கொலை செய்யுமளவிற்குத் தூண்ட முடியுமென்றால், நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்’ என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான்.

நம் வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. ‘கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்’ (நீதிமொழிகள் 15:1).

இனிமையான வார்த்தைகள் நேர்மறையான மாற்றங்களையும், தீமையான வார்த்தைகள் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

வார்த்தைகள் கூர்மையானப் பட்டயம் போன்றவை. பயன்படுத்துகின்றவரைப் பொறுத்து அதன் தன்மை வெளிப்படுகிறது.

தூய பவுல் அடிகளார் ‘உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக’ (கொலோசேயர் 4:6) என்கிறார்.

ஆண்டவராகிய இயேசு தன்னிடம் உதவிக்காக, உடல் நலம் பெறுவதற்காக தன்னை நாடி வந்தவர்களிடத்தில் இனிமையான வார்த்தைகளையே எப்பொழுதும் பயன்படுத்தினார்.

ஆண்டவர் பயன்படுத்திய கனிவான வார்த்தைகள்:

“உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க”. (லூக்கா 7:50)

“மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ”. (லூக்கா 8:48)

“அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்”. (லூக்கா 8:50)

“எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது”. (லூக்கா 17:19)

“பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”. (லூக்கா 18:42)

“அழாதீர்கள்; இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்”. (லூக்கா 8:52)

நாம் பேசுகின்ற இனிமையான வார்த்தைகளே பிறரை உடல் நலம் பெறச் செய்ய இயலும் என்பதை நன்கு அறிந்த ஆண்டவர் இயேசு, கனிவான வார்த்தைகளையே பயன்படுத்தினார். தம் வார்த்தைகளின் வாயிலாகவே நம்பிக்கை விதையை வேரூன்றினார். அவ்வாறே நலம் பெறச் செய்தார்; மன மகிழ்வுடன் கடந்து சென்றனர்.

‘மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்’ (நீதிமொழிகள் 12:25).

தீய வார்த்தைகளைத் தவிர்ப்போம்

உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நாம் பேசுகின்ற வார்த்தைகளை வைத்தே நாம் தீர்மானிக்கப்படுகிறோம். நல்லோர் நல்லவைகளையும், தீயோர் தீமையானவைகளையும் பேசுகின்றனர்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில், ‘மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்’ (மத்தேயு 12:36,37) என்கிறார் ஆண்டவர் இயேசு.

அறிவியல் ஆய்வுகளின்படி, சராசரியாக ஒரு நாளில் ஆண்கள் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் வார்த்தைகளையும், பெண்கள் பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வார்த்தைகளையும் பேசுகின்றனர். நம் வார்த்தைகள் பல நேரங்களில் பிறரைக் காயப்படுத்துவதாக, கலங்க வைப்பதாக, கண்ணீர்விட வைப்பதாக அமைந்துவிடுகிறது.

இன்னும் சில நேரங்களில் பரிகாசம், தூஷணம், சபித்தல் நிறைந்தவைகளாக, செவிகளில் கேட்கவியலாத கெட்ட வார்த்தைகளாக வெளிப்படுகிறது.

‘கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்றவாறு நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். மனக்கசப்பு, சீற்றம், சினம், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்’ (எபேசியர் 4:29,31).

தூய யோவான் நற்செய்தியாளர் ஆண்டவர் இயேசுவை ‘வார்த்தை வடிவில் வந்த கடவுளாகவே’ அறிமுகம் செய்கிறார். வார்த்தைகளின் வலிமை உணர்ந்து பிறருக்கு மகிழ்வைத் தருகின்ற, ஆறுதலளிக்கின்ற இனிமையான வார்த்தைகளையேப் பேசுவோம்.

‘தக்க வேளையில் சொன்ன சொல், வெள்ளித்தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்’ (நீதிமொழிகள் 25:11).

அருட்பணி ம பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

Tags:    

Similar News