ஆன்மிகம்
இயேசு

நிரந்தர சந்தோஷத்தை பெறுவது எப்படி?

Published On 2020-01-22 04:25 GMT   |   Update On 2020-01-22 04:25 GMT
தேவனுடைய அன்பிலும் அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது அவருடைய சந்தோஷம் நமக்குள்ளே கடந்து வருகிறது.
சந்தோஷத்தில் பலவகை உண்டு. பணத்தினால், படிப்பினால், சிற்றின்பத்தினால், பாவத்தினால்... இப்படி பலவிதமான சந்தோஷங்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் இவையனைத்தும் நிரந்தரமானவை அல்ல.

அப்படி என்றால், நிரந்தர சந்தோஷத்தை பெறுவது எப்படி?

‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’. (யோவான் 15:11)

நம்முடைய ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருளும் எண்ணற்ற ஆசீர்வாதங்களில் மிகவும் முக்கியமானது சந்தோஷம். இன்றைக்கு முழு உலகமே சந்தோஷத்தைத் தேடி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் கூட சந்தோஷத்தைப் பெறுவதற்கான வழியை காணும் நோக்கத்தோடு இச்செய்தியை வாசித்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் உலக சந்தோஷத்திற்கும், இவ்வுலகில் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், ஆண்டவர் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமானது. உலகம் கொடுக்கும் சந்தோஷம் நிரந்தரமற்றது. அதுமாத்திரமல்ல ஆரம்பம் ஆரவாரமாக இருந்தாலும் அதன் முடிவு சஞ்சலமாக இருக்கும்.

உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வில் தேவனுடைய பரிபூரண சந்தோஷத்தை பெற்று அனுபவிப்பதுதான் தேவனுடைய சித்தம் என்பதை மறந்து போகாதீர்கள். அதே வேளையில் நம்முடைய சந்தோஷத்தை கெடுப்பதே சாத்தானின் முக்கிய நோக்கமாகும். அதுமாத்திரமல்ல இது அவனுடைய தந்திரம். இதை அநேகர் அறியாதபடியினால் மனிதர்களை தவறாக புரிந்து கொண்டு ஒருவருக்கு விரோதமாய் புறங்கூறி கசப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இயேசுவின் அன்பில் நிலைத்திருங்கள்

‘நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்’. (யோவான் 15:10)

ஒவ்வொரு ஆசீர்வாதங்களை பெறுவதற்கும் வேதத்தில் ஆண்டவர் அருமையான வழியை காட்டியுள்ளார். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் போது ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது அதிக நிச்சயம்.

மேற்கண்ட வசனத்தை மிகவும் கருத்தாக, நிதானமாக வாசித்துப்பாருங்கள். தேவனுடைய சந்தோஷத்தைப் பெறுவதற்கான முக்கியமானவழி அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். மேலும் தேவனுடைய அன்பினால் நாம் நிரப்பப்பட வேண்டும்.

‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம், அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல’. (1.யோவான் 5:3)

மேற்கண்ட வசனத்திலும் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுவதைக் குறித்து நாம் வாசிக்கிறோம். ஒரு பக்கம் தேவனுடைய அன்பிலும் மறுபக்கம் தேவனுடைய கற்பனையிலும் உங்கள் இருதயம் நிரம்ப அர்ப்பணியுங்கள்.

அனுதினமும் வேதத்தை கருத்தாக வாசியுங்கள். வசனத்தின்படி வாழ உங்கள் வாழ்வின் எல்லா பகுதிகளையும் அர்ப்பணியுங்கள். அதைப்போல உங்கள் இருதயம் தேவனுடைய அன்பினால் நிரம்ப இடம் கொடுத்து ஜெபம் பண்ணுங்கள். நிச்சயம் இப்படி நீங்கள் செய்யும் போது கர்த்தர் தம்முடைய சந்தோஷத்தை உங்களில் நிலைத்திருக்கும்படி செய்வார். மாத்திரமல்ல அது நிறைவாக இருக்க அருள் செய்வார்.

இயேசுவின் நாமத்தில் கேளுங்கள், உங்கள் சந்தோஷம் நிறைவாகும்.

‘இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்’. (யோவான் 16:24)

உலக சந்தோஷத்தையும் சிற்றின்பத்தையும் உதறி தள்ளிவிட்டு தேவன் அருளும் மெய்யான மற்றும் நிரந்தர சந்தோஷத்தைப் பெறுவதற்கான மற்றொரு வழியை வேத வசனத்தின் ஆதாரத்தோடு உங்களுக்கு விளக்கிக் காண்பிக்கிறேன்.

ஆண்டவராகிய இயேசு சொன்னார், ‘என் நாமத்தினாலே நீங்கள் கேட்டுக்கொள்கிறது எதுவானாலும் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.’

தேவனுடைய அன்பிலும் அவருடைய கற்பனைகளை கைக்கொள்வதிலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது அவருடைய சந்தோஷம் நமக்குள்ளே கடந்து வருகிறது.

‘இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் ஜெபம்பண்ணி விசுவாசத்தோடு அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது நிச்சயம் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி நீங்கள் கேட்கிற ஆசீர்வாதங்களை கொடுத்து உங்களை கனப்படுத்துவார்’ என யோவான் 16:24 ல் அவரே வாக்குக் கொடுத்திருக்கிறார்.

எனவே மேற்கண்ட ஆலோசனைகளை இன்று முதல் உங்கள் வாழ்வில் பயன்படுத்திப்பாருங்கள். அவரது மெய்யான சந்தோஷம் உங்களில் நிலைத்திருப்பதையும் அது நிறைவாக இருப்பதையும் கட்டாயம் காண்பீர்கள். அதே வேளையில் அவர் உங்களுக்குள் கொடுக்கும் சந்தோஷத்தை திருட சத்துரு தந்திரங்களை கையாளும்போது அவனை எதிர்க்க வசனத்திலும், பரிசுத்த ஆவியிலும் பெலப்படுங்கள்.

சகோ ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
Tags:    

Similar News