ஆன்மிகம்
தெசலோனிக்கர் முதல் நூல்

தெசலோனிக்கர் முதல் நூல்

Published On 2020-01-14 04:03 GMT   |   Update On 2020-01-14 04:03 GMT
புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையான, அதிக தத்துவார்த்த சிந்தனைகள் இல்லாத, அதே நேரம் மிக முக்கியமான பவுலின் கடிதங்களின் பட்டியலில் தெசலோனிக்கக் கடிதங்களுக்குத் தனியிடம் உண்டு.
திருத்தூதர் பவுல், தெசலோனிக்க இறை மக்களுக்காக இரண்டு கடிதங்கள் எழுதினார். அதில் முதலாவது இந்த நூல். பவுல் எழுதிய திருமுகங்களிலேயே முதலில் எழுதப்பட்டது இது தான். இது கி.பி. 51 -ல் எழுதப்பட்டது.

உயிர்ப்பு, தீர்ப்பு, மறுவாழ்வு, இரண்டாம் வருகை போன்ற செய்திகள் இந்த நூலில் அழுத்தமாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பவுல் தனது இரண்டாவது பயணத்தின் போது சந்தித்த நகரங்களில் ஒன்று தெசலோனிக்கா. கி.பி. 49- ல் அவர் இந்த நகரத்துக்கு வருகை புரிந்தார். மாசிதோனியாவிலுள்ள நகரங்களில் மிகப்பெரிய நகரம் இது. ரோமையும் ஆசியாவையும் இணைக்கும் பாதையில் உள்ள முக்கியமான ஒரு துறைமுக நகரம். இங்கே யூதர்கள் கணிசமான அளவு இருந்தனர். இந்த இடத்தில் நற்செய்தியை விதைத்தால் உலகின் பல பாகங்களுக்கும் அது பரவும் என்பதை பவுல் அறிந்திருந்தார், எனவே உற்சாகமாக அவர் நற்செய்தியை அறிவித்தார்.

யூதர்களுடைய தொழுகைக் கூடங்களில் அவர் நற்செய்தியை அறிவிப்பது வழக்கம். ‘இறையரசில் நுழைய யூதராய் இருக்கத் தேவையில்லை, கடவுளுக்குப் பயந்த வாழ்க்கை வாழ்ந்தாலே போதும்’ என அவர் போதித்தார். அது யூதர்களுக்குப் பிடிக்கவில்லை.

யூதர்களின் பெரும்பான்மையான எதிர்ப்பையும், அதன் விளைவாக எழுந்த போராட்டமும் பவுலை அங்கிருந்து வெளியேற்றின. சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே அவர் தெசலோனிக்காவில் இருந்ததாக இறையியலார்கள் குறிப்பிடுகின்றனர். பின்னர் அவர் அங்கிருந்து ஏதென்சு நகருக்குச் சென்றார்.

பல மாதங்கள் கடந்தபின் தெசலோனிக்கா மக்களின் விசுவாச வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய திமோத்தேயுவை அவர்களிடம் அனுப்பினார் பவுல். திமோத்தேயு தெசலோனிக்கா சென்று, கொண்டு வந்த நல்ல தகவல்களினால் உற்சாகமடைந்த அவர் இந்த கடிதங்களை எழுதுகிறார்.

தெசலோனிக்க மக்கள் கொண்டிருந்த விசுவாசத்துக்கு நன்றி செலுத்தும் பவுல், மக்கள் எப்படி வாழவேண்டும், எத்தகைய எதிர்நோக்குடன் பயணிக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். இயேசுவின் இரண்டாம் வருகை, மீட்பு போன்றவை குறித்த மக்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார்.

பவுலின் நற்செய்தி அறிவித்தல் பயணம் மிகப்பெரிய சவால்களுடன் தான் தொடங்கியது. பிலிப்பி பட்டணத்தில் நற்செய்தி அறிவித்தார், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார். தெசலோனிக்கா வந்தார், எதிர்ப்புகள் அவரை விரட்டின. பெரேயா நகருக்குச் சென்றார். அங்கே தங்க முடியவில்லை. ஏதென்சு சென்றார். அங்கிருந்தும் நிராகரிக்கப்பட்டு கொரிந்து நகருக்கு வந்தார்.

அப்படி மனம் உடைந்தவராக இருந்த பவுலுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி தான், தெசலோனிக்க சபை துளிர்விடுகிறது என்பது.

நற்செய்தியை ஏற்றுக்கொண்ட தெசலோனிக்க மக்களைக் குறித்த செய்தி அவருக்கு உற்சாகம் கொடுத்தது என்பதை இந்தக் கடிதம் முழுவதும் உணர முடியும். செயல்களாலும், வார்த்தைகளாலும், அடையாளங்களாலும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பதை பவுல் பதிவு செய்கிறார்.

விசுவாசம், அன்பு, எதிர்நோக்கு எனும் மூன்று முக்கிய விஷயங்களை பவுல் முன்னிறுத்துகிறார். விசுவாசம் என்பது- கடவுள் நமக்குச் செய்த நன்மைகளினால் முளைக்கிறது. அன்பு-அவர் நமக்கு என்ன செய்கிறார் எனும் புரிதலில் தொடர்கிறது. எதிர்நோக்கு-அவர் நமக்கு என்ன செய்வார் எனும் தெளிவில் வலுவடைகிறது. இந்த மூன்றும் வலுவாக இருக்க வேண்டும் என பவுல் விரும்புகிறார்.

பழைய வாழ்க்கையிலிருந்து திரும்பி, இறைமகன் இயேசுவின் பாதையில் நடந்து, இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் தெசலோனிக்க மக்களின் வாழ்க்கையை அவர் பாராட்டுகிறார்.

தெசலோனிக்க மக்கள் இரண்டு விஷயங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என பவுல் விரும்புகிறார். ஒன்று புனிதம், இன்னொன்று எதிர்நோக்கு.

ஆண், பெண் உறவுகளில் புனிதமற்ற சூழல் அங்கு நிலவியது. கிரேக்க பாரம்பரிய வாழ்க்கை முறையில் அவை சரியென கருதப்பட்டன. மனைவியரை மாற்றிக் கொண்டே இருப்பது குற்றமென்றோ, பாவமென்றோ அதுவரை போதிக்கப்படவில்லை. பவுல் தான் மனைவியரை மதிக்கவேண்டும், அன்பு செய்ய வேண்டும், ஒரே மனைவியுடன் தூய வாழ்க்கை வாழவேண்டும் என்பதைப் போதித்தார்.

அதே போல உடல் உழைப்பையும், அதன் முக்கியத்துவத்தையும், உற்சாகமாய் இருக்க வேண்டியதன் தேவையையும் அவர் போதித்தார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது உழைப்பை ஒதுக்கி சோம்பித்திரிவதல்ல எனும் புரிதலை அவர் கொடுத்தார்.

இயேசுவின் இரண்டாம் வருகை மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை அவர் அழுத்தமாய் போதித்தார். புதிய ஏற்பாட்டில் முன்னூறு தடவைக்கு மேல் குறிப்பிடப்படும் இந்த ‘இரண்டாம் வருகை’ கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான ஒன்று என்பதை அவர் வலியுறுத்துகிறார். இறந்தவர்கள் இரண்டாம் வருகையில் பங்குபெற மாட்டார்கள் என்பது தவறான நம்பிக்கை என விளக்குகிறார்.

புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையான, அதிக தத்துவார்த்த சிந்தனைகள் இல்லாத, அதே நேரம் மிக முக்கியமான பவுலின் கடிதங்களின் பட்டியலில் தெசலோனிக்கக் கடிதங்களுக்குத் தனியிடம் உண்டு.

சேவியர்
Tags:    

Similar News