ஆன்மிகம்
கொலோசையர்

பைபிள் கூறும் வரலாறு: கொலோசையர்

Published On 2020-01-07 04:45 GMT   |   Update On 2020-01-07 04:45 GMT
“இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள்” (கொலோசேயர் 2:9)
கிரேக்க வழக்கத்தில் கடிதம் எழுதுவதில் ஒரு வரைமுறை உண்டு. யார் கடிதத்தை எழுதிகிறார் என்பது முதலில் குறிப்பிடப்படும். பின்னர் யாருக்காக எழுதப்படுகிறது என்பது பதிவு செய்யப்படும். அதன் பின்னர் வாழ்த்துகள் பரிமாறப்படும். அதைத் தொடர்ந்து பாராட்டுகள், உற்சாகமூட்டுதல் போன்றவை இடம்பெறும். அதன்பின்பு கடிந்து கொள்தல்களும், மையச்செய்திகளும் இடம்பெறும். கடைசியில் முத்தாய்ப்பான செய்தியும், வாழ்த்துகளும் இடம் பெறும்.

பெரும்பாலான பவுலின் கடிதங்கள் இந்த வரையறைக்குள் தான் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை நூல்களை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம். இந்த நூலை பவுல் சிறையில் இருந்த காலத்தில் எழுதினார் என நம்பப்படுகிறது.

கொலோசையர் நூலை எழுதியது திருத்தூதர் பவுல் என்கிறது விவிலியம். ஆனால் இதை பவுல் நேரடியாக எழுதாமல் அவருடைய சீடர் ஒருவர் எழுதியிருக்கக் கூடும் எனும் சிந்தனையும் சமீப காலத்தில் எழுந் திருக்கிறது. நூலின் மொழிநடையும், வார்த்தைப் பிரயோகங்களும் பவுலின் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டிருப்பதே இதன் காரணம்.

கொலோசைக்கு பவுல் நேரடிப் பயணம் எதுவும் மேற்கொண்டதில்லை. எனவே அங்குள்ள திருச்சபைகளின் உண்மையான நிலவரம் முழுவதும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த செய்தி களையெல்லாம் எப்பப்பிரா என்பவர் மூலமாகக் கேள்விப்பட்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறார்.

எப்பப்பிரா பவுலின் நற்செய்தி அறிவித்தலின் மூலமாக மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்ட மனிதர்.

கொலோசை நகரில் இருந்த பொதுவான பிரச்சினைகளைத் தொட்டு இந்தக் கடிதத்தை பவுல் எழுதுகிறார். கொலோசை பல்வேறு நம்பிக்கைகள், கலாசார வேறுபாடுகள் போன்றவற்றால் நிரம்பியிருந்தது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தாமல் பல விஷயங்கள் அந்த நகரில் பரவலான தாக்கத்தை உருவாக்கியிருந்தன.

உதாரணமாக, ஆவிகளைக் கொண்டு பலவற்றை நிறைவேற்றுகின்ற பழக்கம் அந்த நகரில் இருந்தது. இயற்கையின் நிகழ்வுகளையெல்லாம் மாபெரும் சக்திகள் என வழிபடும் வழக்கமும் இருந்தது. மலைகள், நதிகள், மரங்கள் போன்றவற்றை ஆவிகள் கட்டுப்படுத்தும் என்றும், அந்த ஆவிகளைத் திருப்திப்படுத்தினால் தான் மனித வாழ்க்கை இயல்பாகச் செல்லும் எனும் நம்பிக்கையும் நிலவியது.

வானியல் அறிவு, நட்சத்திர இருப்பு போன்றவையெல்லாம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று மக்களில் ஒரு பிரிவினர் நம்பினார்கள்.

கிரேக்கக் கடவுளர்களும், ரோமக் கடவுளர்களும், தேவதைகளும் நகரெங்கும் நிரம்பியிருந்தன. ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கடவுளரை மக்கள் வழிபட்டனர். உணவுக்கு ஒன்று, பணத்துக்கு ஒன்று, பாலியலுக்கு ஒன்று என தெய்வங்கள் வேறுபட்டன.

யூத மதமும் இங்கே பரவியிருந்தது. ஆனால் அது எருசலேமின் யூத மதத்தைப் போல இல்லை. தத்துவ சிந்தனைகளாலும், வானதூதர் வணக்கங்களாலும், சட்டங்களாலும் அது நிரம்பியிருந்தது. வாழ்க்கை முறையில் பின்னோக்கியே இருந்தது.

இத்தகைய பின்னணியில் தான் கிறிஸ்தவ மதம் அங்கே முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தது. அவர்களுடைய தத்துவ சிந்தனைகளுக்கு அது முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

இயேசு, சர்வ வல்லவராக விண்ணகத்தில் இருக்கிறார். அதே நேரம் நமக்குள்ளேயும் வாழ்கிறார் எனும் இரட்டை சிந்தனையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விண்ணகத்தில் இருக்கிறார் என நம்பியவர்கள், கூடவே மண்ணகத்தில் இருந்து உதவி செய்ய வேறு தேவதைகளை வழிபட்டனர். கூடவே இருப்பதாய் நம்பியவர்கள் விண்ணகத்தில் வேறு கடவுள் இருப்பதாய் வழிபட்டனர். இந்த குழப்பத்தை தெளிவு படுத்த பவுல் விரும்பினார்.

சட்டங்களால் மக்கள் அடக்கப்படத் தேவையில்லை, சுதந்திரமாக இருக்கலாம். இறைவனின் வழிகாட்டுதலின் படி நடந்தால் போதும் எனும் அறிவுரைகளை வழங்குகிறார். வெளி அடையாளங்களில் ஏற்படும் மாற்றமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவை என்பதை வலி யுறுத்துகிறார். எல்லாமே இறைமகன் இயேசுவின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், சிலுவையில் இயேசு அனைத்தையும் வென்று வாழ்வதையும் விளக்குகிறார். சுய வெறுப்பல்ல, இயேசுவின் மீதான விருப்பே முக்கியம் என்பது அவரது போதனையில் இழையோடிய செய்தியாய் இருந்தது.

‘அனைத்தும் இயேசு’ என்பதையே பவுல் கொலோசைக்கு எழுதிய நூலில் மீண்டும் மீண்டும் நிறுவுகிறார். இயேசுவோடு அடையாளப்படுத்திக் கொள்வதன் அவசியம் இதனால் வெளிப்படுகிறது. இயேசுவோடு அடையாளப்பட வேண்டு மெனில் பழைய பாவ இயல்புகள் விலக்கப்பட்டு, இறைமகனின் இயல்புகளை அணிந்து கொள்ள வேண்டும்.

இறைவனை மையப்படுத்தும் பவுல், ஆழமான குடும்ப உறவுகளின் தேவையையும் தொட்டுச் செல்கிறார். கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டிய உறவு, பெற்றோர் பிள்ளைகளிடம் இருக்க வேண்டிய உறவு, தலைவர் பணியாளரிடையே இருக்க வேண்டிய உறவு பற்றியெல்லாம் நேர்த்தியாய் அறிவுரைகள் வழங்குகிறார்.

சுருக்கமாக, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், ஏற்றுக் கொண்டபின் நடக்க வேண்டிய வழிகளையும் இந்த நூலின் வழியாக பவுல் விளக்குகிறார்.

“இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள்” (கொலோசேயர் 2:9)

சேவியர்

Tags:    

Similar News