ஆன்மிகம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தபோது எடுத்த படம்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

Published On 2020-01-02 03:23 GMT   |   Update On 2020-01-02 03:23 GMT
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி தஞ்சை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா’ என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது.

இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிறப்பு திருப்பலி பேராலயத்தின் விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் மறைமாவட்ட ஆயர் மேடையில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறந்ததாக அறிவித்தார். பின்னர் பவனியாக எடுத்து வரப்பட்ட விவிலியம் மறைமாவட்ட ஆயரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது புதுவருட வாசகங்கள் அடங்கிய பைபிளை அங்கு கூடியிருந்த ஏராளமான மக்களிடம் தூக்கி காண்பித்து புத்தாண்டை வரவேற்பதாக அவர் அறிவித்தார்.

பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். பின்னர் வாணவேடிக்கை நடந்தது.

அதனைத்தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணியில் கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

புத்தாண்டையொட்டி விண்மீன் ஆலயம் மற்றும் பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் கீழ் ஆலயத்திற்கு செல்லும் பாதை, விண்மீன் ஆலயத்திற்கு செல்லும் பாதை மற்றும் தியான மண்டபம் அருகில் மின்விளக்கு வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. 
Tags:    

Similar News