ஆன்மிகம்
புத்தாண்டையொட்டி லேசர் ஒளியில் ஜொலிக்கும் பேராலயத்தை படத்தில் காணலாம்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

Published On 2019-12-31 03:39 GMT   |   Update On 2019-12-31 03:39 GMT
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் ’லூர்து நகர்’ என்று இந்த பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் ’பசிலிக்கா’ என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) விண்மீன் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் திருப்பலி நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு நேற்று வேளாங்கண்ணியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

விடுமுறையையொட்டி வேளாங்கண்ணி கடற்கரையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் நாளை(புதன்கிழமை) காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

விழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண லேசர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் ஆலயத்துக்கு செல்லும் பாதை, விண்மீன் ஆலயத்திற்கு செல்லும் பாதை மற்றும் தியான மண்டபம் அருகில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின்விளக்கு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
Tags:    

Similar News