ஆன்மிகம்

தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி இன்று நடக்கிறது

Published On 2018-12-15 08:34 IST   |   Update On 2018-12-15 08:34:00 IST
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றி வைத்தார். திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை பழைய கோவிலில் திருப்பலியும், அதை தொடர்ந்து திருப்பலி திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடந்தது.

மாலையில் ஜெபமாலை திருப்பலியும், மறை மாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் தலைமையில் புதூர் பங்கு பணியாளர் சாம் மேத்யு மறையுரையும் ஆற்றினார். இரவு சப்பர பவனி நடந்தது. 9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி நடக்கிறது. காலை 6.15 மணிக்கு திருப்பலியும், 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு நோயாளர்களுக்கான திருப்பலியும் நடக்கிறது.

இதற்கு வாவத்துறை பங்கு தந்தை ஜான்ஜோர் கென்சன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி முன்னாள் பங்கு தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனியும் நடக்கிறது.
Tags:    

Similar News