ஆன்மிகம்

புனித அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2018-09-21 04:28 GMT   |   Update On 2018-09-21 04:28 GMT
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. மாலையில் செபமாலை, மாலை வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கன்னியாகுமரி புனித அலங்கார உபகாரமாதா ஆலயத்தில் செப்டம்பர் மாதம் திருவிழா நடந்து வந்தது. அப்போது மீன்கள் அதிகமாக பிடிபடும் காலம் என்பதால், தேரோடும் வீதியில் மீன்கள் உலர வைக்கப்படும். இதனால் தேர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பங்குமக்களின் வசதிக்காக 10 நாட்கள் நடக்கும் திருவிழாவை டிசம்பர் மாதத்துக்கு மாற்றியமைத்தனர். ஆனால் பழைய திருவிழாவினை நினைவுகூறும் வகையில் பாரம்பரியமுறைப்படி செப்டம்பர் மாதம் 2 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு திருவிழா வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு செபமாலை, மாலை வழிபாடு, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து வழங்குதல், மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி போன்றவை நடக்கிறது. தொடர்ந்து புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பங்குத்தந்தை ஜோசப்ரொமால்ட் தலைமையில் நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில்மைக்கேல், செயலாளர் சந்தியா வில்வராயன், உதவி செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News