ஆன்மிகம்
பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி நடைபெற்றபோது எடுத்தபடம்.

பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி

Published On 2018-09-10 05:16 GMT   |   Update On 2018-09-10 05:16 GMT
தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பூண்டியில் மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித கன்னி மரியாள் பிறப்பு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புனித கன்னி மரியாள் பிறப்பு நாளான நேற்றுமுன்தினம் மாலை பெரிய தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் மறை வட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வண்ண விளக்குகளாலும், மல்லிகை பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புனித கன்னி மரியாள் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட ஆயர், தேரை புனிதம் செய்து பவனியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கன்னி மரியாளின் காலடியில் மலர் மாலைகள், சேலைகளை வைத்து வழிபட்டனர்.

தேர்பவனி நிறைவடைந்தவுடன் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. பூண்டி மாதா பேராலய திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேராலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News