ஆன்மிகம்
புனித அந்தோணியார்

புனித பெரிய அந்தோணியார் ஆலய விழா தொடங்கியது

Published On 2020-01-17 04:17 GMT   |   Update On 2020-01-17 04:17 GMT
மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று மாலை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

நாளை அதிகாலை 2 மணிக்கு திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணிமையம் செயலர் சாம்சன் ஆரோக்கியதாஸ் தலைமையில் தேரடி திருப்பலி நடை பெறுகிறது. தொடர்ந்து புனித பெரிய அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, புனித ராயப்பர், சிறிய அந்தோணியார், புனித வானதூதர் ஆகிய ரத பவனி புறப்பட்டு வாணவேடிக்கையுடன் ஆலயத்தை சுற்றி வருகிறது. பின்னர் மாலை 3 மணிக்கு பெரிய தேர்கள் பவனி ஆலயத்தை சுற்றி வருகிறது. இரவு 7 மணிக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கரூர் எம்.பி. ஜோதிமணி, திண்டுக்கல் ஸ்ரீதரணி குழுமம் தலைவர் எம்.ரத்தினம், முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன், முன்னாள் மேயர் வீ.மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. வி.பி.பி.பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, திரைப்பட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுப்பிரமணியன், மாரம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரொசாரியோ உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை எஸ்.அமலதாஸ் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஏ.ஆபேல் மற்றும் பெரியதனக்காரர்கள், அமலவை கன்னியர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி திண்டுக்கல் மற்றும் வேடசந்தூரில் இருந்து மாரம்பாடிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
Tags:    

Similar News