ஆன்மிகம்
புனிதவெள்ளியையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்த போது எடுத்த படம்.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

Published On 2019-04-20 03:32 GMT   |   Update On 2019-04-20 03:32 GMT
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்களின் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக திகழ்வது சிலுவைப்பாதை வழிபாடு.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வு நடந்த தினம் ஆண்டுதோறும் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு, அந்த சிலுவையை சுமந்து கொண்டு ஜெருசலேம் நகரில் இருந்து கொல்கதா மலைக்கு சென்றதையும் அப்போது அவர் அடைந்த துன்பம், வேதனைகளை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று புனித வெள்ளியையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பகல் 11.30 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு தொடங்கியது.

பங்குத்தந்தையும், ஈரோடு வட்டார முதன்மை குருவுமான ஜான் குழந்தை சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை சுந்தரம் சிலுவைப்பாதை வழிபாட்டினை வழிநடத்தினார். 14 சிலுவை பாடுகளை தியானித்து பிரார்த்தனை நடத்தப்பட்டது.

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு, சிலுவை முத்தம் வழிபாடு நடந்தது.

இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு பாஸ்கா பெருவிழா, கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் புதுப்பித்தல் விழாவும் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்து ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்ட திருப்பலியும் நடக்கிறது. இதுபோல் ஈரோட்டில் உள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் நேற்று புனிதவெள்ளி சிறப்பு நிகழ்வுகள் நடந்தன.
Tags:    

Similar News