கிரிக்கெட்

அரை சதத்தை தியாகம் செய்த விராட் கோலி... அதிரடி காட்டிய கார்த்திக்...வைரலாகும் வீடியோ

Update: 2022-10-03 08:10 GMT
  • இந்திய அணி பேட்டிங் செய்த போது சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 19-வது ஓவர் வரையில் 28 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தார்.
  • 20-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் நேராக கோலியிடம் சென்று ஸ்ட்ரைக் கொடுக்கவா? என்பது போல் கேட்டார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்த போது சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 19-வது ஓவர் வரையில் 28 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தார். அரைசதம் அடிக்க கடைசி ஓவரில் இன்னும் ஒரு ரன் தேவை என்ற சூழலில் தான் தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.

20-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் நேராக கோலியிடம் சென்று ஸ்ட்ரைக் கொடுக்கவா? என்பது போல் கேட்டார். ஆனால் கோலியோ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எனது அரைசதத்தை விட அணியின் ஸ்கோரே நமக்கு முக்கியம். நீ அடித்து விளையாடு என்பது போல சைகை காட்டினார். இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

விராட் கோலி கூறியதை போலவே தினேஷ் கார்த்திக் தனது பணியை சரியாக செய்து முடித்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 237 ரன்களை குவித்தது.

தினேஷ் கார்த்திக் கேட்டதற்கு விராட் கோலி சைகை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News