கிரிக்கெட்

பும்ரா - ரோகித் சர்மா

இந்தியா-இங்கிலாந்து மோதும் டெஸ்ட் நாளை தொடக்கம்: ரோகித் சர்மா விளையாடுவாரா?

Published On 2022-06-30 06:05 GMT   |   Update On 2022-06-30 06:05 GMT
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே.
  • அதே நேரத்தில் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதில் உறுதியில்லை என்று பயிற்சியாளர் டிராவிட தெரிவித்துள்ளார்.

எட்ஜ்பஸ்டன்:

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

முதல் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்டில் 151 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 157 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்னில் வெற்றி பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே. இதனால் வேகப்பந்து வீரர் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கபில்தேவுக்கு பிறகு வேகப்பந்து வீரர் ஒருவர் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார்.

அதே நேரத்தில் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதில் உறுதியில்லை என்று பயிற்சியாளர் டிராவிட தெரிவித்துள்ளார். இன்றைய இறுதிகட்ட பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும். ரோகித் சர்மா ஆடாமல் போனால் சுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் களம் இறங்கலாம்.

விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், விஹாரி, ரிஷப்பண்ட் ஆகியோர் அடுத்த வரிசையில் ஆட கூடியவர்கள். வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் ஜடேஜா ஆடுகிறார். ஷர்துல் தாகூர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர்.

இந்த டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்தை வீழ்த்தினால் 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும். தோற்றால் தொடர் சமநிலையில் முடியும்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவாக இருக்கிறது. அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோரூட், பேர்ஸ்டோக், ஆண்டர்சன், ஜேக்விச் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்து அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலானது.

இரு அணிகளும் மோதிய 130 டெஸ்டில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 49-ல் வெற்றிபெற்றன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

Tags:    

Similar News