கிரிக்கெட்

தந்தையின் சாதனையை 3-வது போட்டியிலேயே முறியடித்த தேஜ்நரின் சந்தர்பால்

Update: 2023-02-07 07:15 GMT
  • முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
  • பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர்.

புலவாயோ:

ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு இடையே பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 116 ரன்களுடனும், தேஜ்நரின் சந்தர்பால் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர்.

இந்த கூட்டணி ஸ்கோர் 336-ஐ எட்டிய போது உடைந்தது. பிராத்வெய்ட் 182 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய தேஜ்நரின் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தேஜ்நரின் 207 ரன்களுடன் (467 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இவரது தந்தை ஷிவ் நரின் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 203 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த ஸ்கோரை தனது 3-வது டெஸ்டிலேயே கடந்து அசத்தியிருக்கிறார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News