null
கிரிக்கெட் வரலாற்றில் இது 3-வது முறை: தென் ஆப்பிரிக்கா அணி வினோத சாதனை
- தென்னாப்பிரிக்க அணி சார்பாக 32 பவுண்டரிகள் விலாசபட்டது.
- 2011-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 333/6 ரன்களை எடுத்திருந்தது.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. அதன்படி முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்கா அணி சார்பாக வேண்டர்டுசைன் சிறப்பாக விளையாடி 133 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 77 ரன்களும், துவக்கவீரர் மலான் 57 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் 334 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக நல்ல துவக்கத்தை பெற்றது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில் நிச்சயம் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துவக்க வீரர்கள் இருவரை தொடர்ந்து ஜோ ரூட் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் இறுதியில் இங்கிலாந்து அணி 46.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டி இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ்க்கு கடைசி ஒருநாள் போட்டி என்பதால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே வேளையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கின் போது ஒரு வினோதமான நிகழ்வும் நடந்துள்ளது.
ஏனெனில் 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 333 ரன்கள் குவித்தும் அந்த அணியின் வீரர்கள் ஒருவர் கூட ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. தென்னாப்பிரிக்க அணி சார்பாக 32 பவுண்டரிகள் விலாசபட்டதே தவிர ஒரே ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி எந்த ஒரு சிக்சரும் அடிக்காமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 2011-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 333/6 ரன்களை எடுத்திருந்தது. 2020-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி 345/8 ரன்களை எடுத்தது. ஒரு சிக்சர் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த அணியாக இலங்கை அணி முதல் இடத்தில் உள்ளது.