கிரிக்கெட்
null

உங்கள் மீதான நம்பிக்கையை எப்போதும் கைவிடாதீர்கள்- ஷஷாங்க் குறித்து ப்ரீத்தி ஜிந்தா நெகிழ்ச்சி

Published On 2024-04-05 15:23 GMT   |   Update On 2024-04-05 16:26 GMT
  • மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
  • அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு.


குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் அவருக்கும் என் பாராட்டும் மரியாதையும் உண்டு என பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஏலத்தில் எங்களைப் பற்றி கடந்த காலத்தில் கூறப்பட்ட விஷயங்களைப் பற்றி இறுதியாகப் பேச இன்று சரியான நாள் போல் தெரிகிறது. இதேபோன்ற சூழ்நிலைகளில் நிறைய பேர் நம்பிக்கையை இழந்திருப்பார்கள். அழுத்தத்தின் கீழ் வளைந்திருப்பார்கள் அல்லது ஊக்கம் இழந்திருப்பார்கள். ஆனால் ஷஷாங்க் அப்படி இல்லை. அவர் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தவர்.

தன்னுடைய திறமையால் மட்டுமல்ல, மிகச்சிறப்பான நேர்மறை எண்ணத்தால். ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தையும் ஜாலியாக எடுத்துக்கொண்டு, தக்க நேரத்தில் தன்னிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி கைத்தட்டல்களை அள்ளினார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அவருக்கு என் பாராட்டும் மரியாதையும் உண்டு. வாழ்க்கை ஒரு வித்தியாசமான திருப்பத்தை எடுக்கும் போது மற்றும் ஸ்கிரிப்ட் படி விளையாடாதபோது அவர் உங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். எனவே ஷஷாங்க் போல் உங்களை நம்புவதை நிறுத்தாதீர்கள் & வாழ்க்கையின் விளையாட்டில் நீங்கள் ஆட்ட நாயகனாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்

இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா கூறினார்.

Tags:    

Similar News