கிரிக்கெட்

சதமடித்த தீபக் ஹூடா

தீபக் ஹூடா அதிரடி சதம் - அயர்லாந்து வெற்றிபெற 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Update: 2022-06-28 17:12 GMT
  • இந்தியாவின் தீபக் ஹூடா அதிரடியாக ஆடி 55 பந்துகளில் சதமடித்தார்.
  • தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்களை குவித்தது.

டப்ளின்:

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 13 ஆக இருக்கும்போது இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் அயர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்டனர்.

சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது. சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார்.

அயர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது. இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News