சினிமா

இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கிறார்கள் - இளையராஜா

Published On 2019-01-25 07:42 GMT   |   Update On 2019-01-25 07:42 GMT
இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று கல்லூரி விழாவில் இளையராஜா பேசினார். #Ilayaraja75
இசை அமைப்பாளர் இளையராஜா இந்த ஆண்டு தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்த வரிசையில் இளையராஜாவின் பிறந்தநாள் விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நுண்கலை புலம் சார்பில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் இளையராஜா மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டினார். அவர் பேசியதாவது:-

‘‘இந்த அரங்குக்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். 1994-ம் ஆண்டு எனக்கு இந்த அரங்கில் தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்போது வந்துள்ளேன். இசையும், பாடல்களும் காற்றில் பரவும் அசுத்தங்களை சுத்தம் செய்கின்றன.

நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்குவப்பட்ட இதய குரலில் இருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையாட்டுகிறோம். இதனால் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் இதை என்னிடம் கூறியுள்ளனர்.

அடிக்கிற அலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அதேபோல் மாணவர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நீரோடைகள் செல்லும் இடங்களைப் பசுமையாக்குவது போல மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும். சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது.


நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளன. இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன்’’

இவ்வாறு கூறிவிட்டு தன் முன் இருந்த ஆர்மோனிய பெட்டி மீது சத்தியம் செய்தார்.

துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், “பல்கலைக்கழக இசைத்துறையில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்க போகிறோம். பல்கலைக்கழகத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தில் இருக்கை அமைக்க அனுமதி வேண்டும்.

இந்த இருக்கையின் மூலம் இசைத் துறையில் தனித்தன்மை வகிக்கும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார். இதனை இளையராஜா ஏற்றுக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தருவதாக கூறினார். #Ilayaraja75 #ProducerCouncil #Vishal

Tags:    

Similar News