உள்ளூர் செய்திகள்
மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
திருவண்ணாமலை அருகே நிலத்தில் மேய்ந்த மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
இந்தியாவின் தேசிய பறவை மயில். திருவண்ணாமலை பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன. அவைகள் எப்போதாவது விவசாய இடங்களுக்குச் சென்று இரை தேடும்.இதனைபொறுத்துக் கொள்ள முடியாத சிலர் அவைகளை விஷம் வைத்துக் கொன்று விடுகின்றனர்.இதுபோன்ற சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று உள்ளது.
வேலூர் வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் குழுவினர் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கீரனூர் ராஜபாளையம் என்ற பகுதியில் விவசாய நிலத்தில் பயிர்களை தின்ற 6 மயில்களை விஷம் வைத்துக் கொன்று இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த காசிராஜா (வயது57) என்பவர் தனது நிலத்தில் இரை தேடி வந்த மயில்களை விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஒரு ஆண் மயிலும், ஐந்து பெண் மயில்களும் இறந்துள்ளன.
தேசிய பறவையான மயில்களை வேட்டையாடிய குற்றத்திற்காக காசிராஜாவை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது மயில்களை விவசாயிகள் கொல்லக் கூடாது. அவ்வாறு கொன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.